April 19, 2024

ஸ்கொட்லாந்தில் வைத்து கோட்டாபய அறிவிப்பு

நிலையான அபிவிருத்தியே அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும் என அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று இடம்பெற்ற ‘ காலநிலை மாற்றம், என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அம்மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்து செயற்பட வேண்டும். நிலையான அபிவிருத்தியே அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கமைய, இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயங்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன நன்கு பிரதிபலிக்கின்றன.

நவீன, விஞ்ஞான பொறிமுறைகள் மற்றும் பண்டைய வழிமுறைகள் ஊடாக, சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே, தற்போது சவாலாக உள்ளது.

இலங்கையில் விவசாயிகளிடையே, பல தசாப்தங்களாக சிறுநீரக நோய் நிலைமை பாரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக இரசாயனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதேயாகும்.

இந்நிலையிலேயே இரசாயனப் பசளை இறக்குமதியைக் குறைப்பதற்கும், சேதன விவசாயத்தை அதிகளவில் ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு அபிவிருத்தி உதவிகள், தொழில்நுட்ப பரிமாற்றல்கள், திறன் அபிவிருத்தி, முதலீடுகள் மற்றும் நிதி உதவிகளையும் இயலுமான பங்களிப்புகளையும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.