März 28, 2024

நாடு அழிந்து போவதற்கு காரணம் இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்த மக்களே!

இன்றைய பொருளாதார நிலை மிகவும் பாரதூரமாக இருக்கின்றது. சிம்பாவேயின் நிலைக்கு ஒத்த நிலையாக வந்து கொண்டிருக்கின்றது. நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து தெரிவு செய்த மக்களேயன்றி வேறு யாரும் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட ஏற்பாட்டாளர் என்.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் ஐ.நா உரை சிறப்பாக இருந்தது. ஆனல் இதற்கு முன்பிருந்த தலைவர்களும் இத்தனை வருட காலமாக இதேவிதமாகவே உரை நிகழ்த்தியிருக்கின்றார்கள். அவை உரையாக மாத்திரமே இருக்கின்றது. அதே போன்று இல்லாமல் நிகழ்த்திய உரையை செயற்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

அது மட்டுமல்லாமல் அவர் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச வேண்டும் என்று கூறியிருப்பதும் ஒரு பாராட்டுக்குரிய விடயமாகும். ஏனெனில் புலம்பெயர்ந்த தமிழர்களே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆட்டிப்படைக்கும் சக்தியாக இருக்கின்றார்கள். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தன்னுடன் கதைக்க வேண்டும் என்று கதைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

அதனை உணர்ந்து தான் அவர் வெளிநாட்டில் வாழ் தமிழர் அமைப்புகளுடன் பேச முற்பட்டிருக்கின்றார். அதனை நாம் வரவேற்கின்றோம். அவை ஒருபுறம் இருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் பசளை இல்லாத பெருங்குறைபாடு இந்தப் பெரும்போகத்திலே இருக்கின்றது.

இன்றுவரை ஒருதீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை. இயற்கைப் பசளை இறக்குமதி செய்வதென்றால் அவை உரிய முறையில் அமைந்திருக்கின்றனவா? அவை பாவனைக்கு உகந்தனவா? என்பதைப் பரிசோதித்ததில் குறைபாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதுமட்டுமல்லாது, இன்றைய பொருளாதார நிலை மிகவும் பாரதூரமாக இருக்கின்றது. சிம்பாவேயின் நிலைக்கு ஒத்த நிலையாக வந்து கொண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்தான் என்ற நாட்டில் சரியான ஒரு நிருவாக அமைப்பு இல்லை. ஆனால் அந்த நாட்டு நாணயப் பெறுமதி நமது நாணயத்தை விட அதிகமாக இருக்கின்றது. ஆப்கானிஸ்தானை விட கீழ்த்தரமான நிலையில் இருக்கின்றோம்.

சிம்பாவே நாட்டிலே இன்று அவர்களது நாட்டுப் பணம் பாவிப்பதில்லை. டொலர், இந்திய ரூபாய் அல்லது யூரோ கொடுக்க வேண்டும். அதே நிலைதான் இங்கும் வர இருக்கின்றது. இலங்கையில் எதிர்காலத்தில் எமது பணத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லாத நிலைமையே ஏற்படும். எதிர்காலத்தில் நாமும் நாட்டில் பொருட்களை வாங்குவதாக இருந்தால் சீன ரூபா, இந்தியா ரூபா, யூரோ கொடுத்துதான் வாங்க வேண்டும்.

இவ்வாறு இந்த நாட்டை விற்றுக் கொண்டு சென்றால் இந்த நாட்டை யார் ஆள்வது. யார் நிர்ணயிப்பது. தற்போதைய இந்த நாட்டின் நிலைமைக்குக் காரணம் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்துத் தெரிவு செய்த மக்களேயன்றி வேறு யாரும் அல்ல.

மக்கள் வாக்களித்து தான் கிட்லர், முசோலின், இடியமீன் ஆகியோரைத் தெரிவு செய்திருந்தார்கள். அதேபோன்று எமது மக்களும் வாக்களித்து இவ்வாறான அரசாங்கத்தைத் தெரிவு செய்து இந்த நாடு அழிந்து போக செய்திருக்கின்றார்கள் என்பதையும் மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.