April 25, 2024

பிரிவதா? தமிழ் மக்களே தீர்மானிக்கட்டும்:கம்சி குணரட்ணம்!

 

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச மத்தியஸ்தத்துடனான விசாரணைகள் மூலமே தீர்வுகள் எட்டப்படவேண்டுமென தெரிவித்துள்ளார் நோர்வேயின் புதிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரட்ணம்.

காணொளி வழி ஊடக சந்திப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து வெளியிட்ட அவர் நடந்த யுத்தத்தின் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பில் பதிலளிக்கையில் சர்வதேச விசாரணை மூலமே அதற்கான தீர்வை பெறமுடியுமென தெரிவித்தார்.

முதலில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்தால் மட்டுமே நல்லிணக்கம் காணப்படமுடியும். பாதிக்கப்பட்ட மக்களிற்கு முதலில் நீதி கிடைக்கவேண்டும்.

அவ்வாறு நீதி கிட்டாத நிலையில் பேசப்படும் நல்லிணக்கம் என்பது வெறுமனே பெயரளவில் மட்டுமே இருக்குமெனவும் அவர் தெரிவித்ததார்.

இதனிடையே தமிழ் மக்களிற்கு நோர்வே இறுதி யுத்த காலத்திற்கு துரோகமிழைத்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் நோர்வே இலங்கையுடன் தொடர்ந்தும் நட்பிலிருக்கவேண்டுமெனவும் முதலீடுகளை செய்வதன் ஊடாகவே தனது பிடியினை தொடர்வதுடன்; நிலைப்பாட்டை பேணமுடியுமெனவும் தெரிவித்த அவர் எனினும் சமாதானப்பேச்சுக்களின் பின்னர் போது நோர்வேயை இலங்கை வெளியேற்றியிருந்ததாக தெரிவித்தார்.

எனினும் இலங்கை எவ்வாறு பயணிக்கவேண்டுமென்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்கவேண்டுமென தெரிவித்த அவர் வெளியிலிருந்து அழுத்தங்களை தருவது பொருத்தமற்றதெனவும் தெரிவித்தார்.

அதேவேளை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் முறையிட இலங்கையில் சிங்கள காவல்துறையினரே உள்ளதாக தெரிவித்த அவர் அதனால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கு தீர்வு கிடைக்கவில்லையென தெரிவித்த அவர் அதனை மாற்றவேண்டுமென தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் மக்கள் இணைந்திருக்கவேண்டுமா இல்லையாவென்பதை தமிழ் மக்களே தீர்மானிக்கவேண்டுமெனவும்  கம்சி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.