April 25, 2024

வடக்கில் வீடற்ற ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டி கையளிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வறுமையின் பிடியில் உள்ளவர்களுக்கு தேவையான சில உதவிகளை புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் அமைப்புக்களும் செய்து வருகின்றனர். இவ்வாறான உதவிகளுக்கிடையில் இலங்கையின் இராணுவம் மற்றும் விமானப் படை ஆகியவற்றின் சார்பிலும் பல உதவித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான உதவிகள் வழங்கும் திட்டம் ஒன்றின் கீழ், கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திலுள்ள முக்கொம்பன் பகுதியில் வாழும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இரு குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் சமூக திட்டத்தின்படி கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் வேண்டுகோளை ஏற்று தற்போது இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதியின் மூலம் இந்த புதிய வீடு 20வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர், 66வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல், அஜித் திஸாநாயக்க, 662 பிரிகேட் தளபதி சமிந்த லியானகே மற்றும் படையினர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்குக் கிடைக்கப் பெற்ற நிதி உதவியுடன் விஜயபாகு காலாட் படை படைப்பிரிவினரால் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் கமலாஸ் பெர்னாண்டோ எனும் வறிய குடும்பத்திற்கான புதிய வீடொன்றும் நிர்மாணிக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு கையளிக்கும் வைபவததில் அரசியல்வாதிகள் எவரும் கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.