März 28, 2024

யாழில் ஆவாக்களோடு ஆத்தாக்களும்

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் சிலரின் மோசமான செயல்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் யாழில் ஆவாக்களோடு ஆத்தாக்களும் உருவாகிறார்களா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சுற்றிவர நான்கு ஐந்து பெண்கள். வெறித்தனமாய் கத்துகிறார்கள். கைகளில் தடி பொல்லுகள். மிளகாய் தூள். நடுவில் முழங்காலில் நிறுத்தி வைக்கப்பட்ட மெல்லிய வாடலான இளைஞன். அடிகள் விழுகின்றன. “கைகளை எடு எடுக்காட்டில் இன்னும் அடிப்போம்.” என ஒரு தரப்பினர் கத்துகின்றனர். பூசு பூசு என, அந்த இளைஞனின் கண்களில் மிளகாய் தூளை, மறுதரப்பினர் பலாத்காரமாக பூசுகின்றனர். சுற்றிவர ஒரு தரப்பினர் அந்தப் பெண்களை உற்சாகப்படுத்தி வேடிக்கை பார்க்கின்றனர்.

இப்படி ஒரு குரூரத்தை அண்மைக்காலத்தில் வடக்கிலோ, கிழக்கிலோ நான் பார்க்கவோ கேட்கவோ இல்லை. யாழ் நாவாந்துறையில், பகல் வேளையில், பொதுவெளியில், பலரின் முன்னிலையில் ஒரு “றியலான” சித்திரவதை ஒன்றை அரங்கேற்றிய பெண்கள் அதனை காணொளியாக எடுத்து சமூகவலைத்திலும் பதிவேற்றினர்.

அதனால் மனமுடைந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டான். இதனை பெண்கள் செய்தார்கள் என்பதற்காக, அல்லது பெண்கள் என்றால் இந்த சமூகம் கூறும் இலக்கணங்களாய் இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க மனநிலையில் இதனை எழுதுகிறேன் என யாராவது நினைத்தால் அது என்தவறு அல்ல.

இதனை யார் செய்திருந்தாலும் மிகமோசமான, ஜீரனிக்க முடியாத சித்திரவதையுடன் கூடிய வன்முறை – காடைத்தனம் என்றே சொல்வேன். அந்தக் காணொளியை இடையில் நிறுத்திவிட்டேன். என்னால் தாங்க முடியவில்லை.

இரு இளைஞர்களிடையே புறா வளர்ப்பில் ஏற்பட்ட முரண்பாடு வாய்த்தர்க்கமாக மாறி மோதலாக வெடித்து, பின் சமரசத்திற்கு போனவேளை இந்த மோசமான செயல் இடம்பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். இங்கே இரு தரப்பிலும் யார் சரி யார் பிழை என நான் வாதிட வரவில்லை.

சித்திரவதைக்கு உள்ளாகி, மரணித்த அந்த இளைஞனே தவறு செய்திருக்கலாம். அதற்கு ஏற்றுக்கொள்ள முடியாத இந்த இந்தக் குரூரமா தண்டனை? இப்படி பொல்லுகள், தடிகள், மிளகாய் தூள், காணொளி பதிவேற்ற – கையடக்கத் தொலைபேசியுடன் ஒவ்வொருவரும் புறப்பட்டால் நிலமை என்னவாகும்?

இப்படியான வன்மம் நிறைந்த கொடூரங்களை 80களில் இயக்கங்களுக்கு இடையிலான மோதல்களில் கண்டிருக்கிறேன். அரச உளவாளிகள், சமூக விரோதிகள் என இயக்கங்கள் தாம் நினைப்பவர்களை பொது வெளியில் கட்டி வைத்து அடித்ததனை, அவர்களை நோக்கி பொதுமக்கள் கற்களால் எறிந்ததனை, காறித் துப்பியதனை கண்டு இருக்கிறேன். கண்கலங்கி வெதும்பியிருக்கிறேன்.

கீரிமலை வியாளி உள்ளிட்ட நாவாந்துறை, கொட்டடி, சண்டியர்களையும் சண்டித்தனங்களையும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதன் பின் கடந்த சில நாட்களுக்கு முன்தான் நாவாந்துறையில் இடம்பெற்ற அட்டூளியத்தை பார்த்து பதைபதைத்தேன்.

ஏற்கனவே யாழில் வாள்வெட்டுக்கள் வகை தொகையின்றி தொடர்கின்றன. இளைஞர்களின் வீர சாகசங்களால் சொத்துகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அங்கே நின்மதியாக தூங்குவதற்கு மக்கள் அஞ்சுகின்றனர்.

தனிப்பட்ட பகைகளுக்காக, வியாபார போட்டிகளுக்காக, வாள்வெட்டுக் குழுக்கள் வாடகைக்கு அமர்த்தப்படகின்றன. இரவு பகல் பாராமல் வீடு புகுந்து அட்டகாசிக்கின்றனர். அந்த அட்டகாசங்கள் யாழ்விட்டு வன்னிக்கும் தாவுகின்றன.

இன்னுமொருபுறம் யுத்தத்தில் தொலைத்த தம் உறவுகளை தேடியும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும் தாய்மார்கள், தந்தையர்கள், உறவினர்கள் வீதிகளில் இறங்கி வருடக்கணக்கில் போராடுகின்றனர்.

நில அபகரிப்புக்கு, கலாசார, பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு, பெரும்பான்மை இன நியமனங்களுக்கு, எஞ்சியிருக்கும் அதிகாரங்களையும், மத்தியை நோக்கி குவிப்பதற்கு எதிராக எல்லாம் போராடுகிறார்கள். அதிகாரப் பரவலாக்கம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி, சமஸ்டி, ஒருநாடு இரு தேசம் என்ற கோசங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவையெல்லாம் இந்த தறிகெட்ட “ஆவா”க்களாலும், “ஆத்தா”க்களாலும் மீண்டும் மீண்டும் பாழாய் போகாதா? ஆவா குழுக்கள், வாள்வெட்டுக் குழுக்களின் பின்னால், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரும், படையினரும் இருப்பதாக, அல்லது அவர்களால் ஊக்குவிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆயின் தடி பொல்லுகளுடனும், மிளகாய் தூளுடனும் சன்னதம் ஆடிய இந்த ஆத்தாக்களின் பின்னாலும் புலனாய்வுப் பிரிவு நிற்பதாக கூறமுடியுமா? ஆக தமிழ்ச் சமூகம் வன்முறை மீது காதல் கொண்டதா? எங்கே போகிறோம் சிந்திப்போம்.

நடராஜா – குருபரன் முகநூல் பதிவிலிருந்து….