März 29, 2024

இஷாலினி மரணம் – சிக்கவுள்ள உயர் பொலிஸ் அதிகாரி

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த டயகம சிறுமி இஷாலினியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பொலிஸார் விசேட விசாரணை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் பணிபுரியும் நவாஸ் என்ற பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு சிறுமியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் ரிசாத் பதியுதீனின் மாமனார் குறித்த நவாஸ் என்ற பொலிஸ் அதிகாரிக்கு அழைப்பெடுத்து கூறியதாகவும் அதன்பின் பதியுதீன் வீட்டுக்குச் சென்ற அவர் சிறுமியின் பெற்றோருக்கு 50000 ரூபா பணம் வாங்கித் தருவதாகவும் இந்த விடயத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரி நவாஸ் இதற்கு முன்னர் ரிசாத் பதியுதீனின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியதாகவும் அவரது தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.