April 18, 2024

வரலாற்றில் மறக்கப்படும் வரலாற்றில் மறைக்கப்படும் தமிழினப் படுகொலைகள்! பனங்காட்டான்


1983 யூலை 25 தமிழின அழிப்பு ஆரம்பத்துக்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்னர் லண்டன் ரெலிகிராப் பத்திரிகைக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அளித்த செவ்வியில் பின்வருமாறு சொன்னார்: ‚யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்து இப்போது என்னவென்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை. இப்போது அவர்கள் பற்றி நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியோ அல்லது அவர்கள் எங்களைப் பற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளனர் என்பது பற்றியோ சிந்திக்க முடியாது. வடக்கின் மீது எவ்வளவுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு இங்கு சிங்கள மக்கள் மகிழ்வடைவார்கள்… உண்மையில், தமிழரை நான் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் சந்தோசமடைவர்….“ என்பதுவே ஜே.ஆரின் வாக்குமூலம். அதனையே செயலிலும் காட்டினார்.

மன்னிப்பது மனித இயல்பு. மன்னிக்கப்படுபவன் தன் தவறை உணரும்போது அவன் உண்மையான மனிதனாகிறான். அதனால் அவன் திருந்திவாழ முடிகிறது என்பர் கற்றறிந்தோர். சமூக வாழ்வில் இந்தக் கூற்று சிலவேளை உண்மையாகலாம். ஆனால், அரசியல் வாழ்வில் இதனை நிரூபிக்கக்கூடியதாக எந்த நிகழ்வும் இடம்பெற்றதாக வரலாற்றில் இல்லை.

எனினும், ஈழத்தமிழர் என்னதான் நடைபெற்றாலும் மன்னிப்பது மட்டுமன்றி மறந்து வாழ்வதும்கூட சகஜமாகிவிட்டதைப் பார்க்கிறோம்.

மனித முன்னேற்றத்துக்கு ஞாபக சக்தி அவசியம். இப்பத்தியில் முன்னேற்றம் எனக் குறிப்பிடுவது தனிமனித நிகழ்வுகளையன்று. ஓரினத்தின் இருப்பு, அதன் பாதுகாப்பு, அதன் எதிர்காலம், அதன் அடிப்படை உரிமைகளுக்கான அரசியல் பங்களிப்பு ஆகியவைகளோடு, கடந்த காலத்தில் கற்றுக்கொண்ட, பெற்றுக்கொண்ட அனுபவங்கள் இங்கு முக்கியமானவை.

இந்த மாதம் 25ம் திகதி ஈழத்தமிழத் வாழ்வில் மறக்க முடியாத அழிவுக்குரிய ஒரு நாள். இதனைக் கறுப்பு யூலை என்போம். இந்தத் தமிழினப் படுகொலையின் முப்பத்தெட்டாவது நினைவு நாள் இம்மாதம் 25ம் திகதி. இந்தவேளையில், இது ஒன்றை மட்டும் நினைவிற் கொள்ள முடியாது. இதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற – இன்றும் வேறுவடிவில் இடம்பெறும் தமிழின அழிப்புகள் நினைவுக்கு மட்டுமன்றி பதிவுக்கும் உரியவை.

இனஅழிப்பு என்பது மனிதப் படுகொலையை மட்டும் குறிப்பது அன்று. ஓரினத்தின் பாரம்பரியக் கலைகள், கலாசார விழுமியங்கள், பண்பாட்டு நடைமுறைகள், வழிபாடுகள், குடியிருப்புகள், தொழில் வளங்கள் போன்றவைகளை – இவற்றுள் ஏதாவதொன்றைக் குறிவைத்து அழிப்பதாக இருந்தாலும் அது இனஅழிப்புத்தான்.

2009ல் முள்ளிவாய்க்காலில் உறைநிலை கண்ட விடுதலைப் போராட்டத்தின் போது இலங்கை அரசின் சிங்களப் படைகள் நடத்திய வெறியாட்டத்தை இனசங்காரம் என்றே குறிப்பிட வேண்டும். தமிழ் மக்களை அவர்களின் பூர்வீக மண்ணில் (தாய்மண்) கொன்றொழித்த வரலாறு நிகழ்கால சாட்சியத்துக்கானது. இதற்கான பொறுப்புக் கூறலையும், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறையையும் ஒப்புக் கொள்ளவே மறுத்துவரும் சிங்கள பௌத்த அரசாங்கங்கள், தமிழரின் நியாயமான அரசியல் அபிலாசைகளை எவ்வாறு வழங்கும்?

இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு சிங்கள அரசாங்கமும் தமிழரின் பூர்வீக காணிகளை அபகரிப்பதையே (காணி பிடிப்பது) இலங்காகக் கொண்டுள்ளன. முதலாவது பிரதமரான டி.எஸ். சேனநாயக்க, தமது முதலாவது அமைச்சரவையில் காணி அமைச்சராக தமது நம்பிக்கைக்குரிய தமது புதல்வர் டட்லி சேனநாயக்கவையே நியமித்தார் என்பதிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

அடுத்து வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கத்தில் காணி, காணி அபிவிருத்தி அமைச்சராக சி.பி.டி.சில்வா பதவி வகித்தார். அதற்கு முன்னர் இவர் பொலநறுவ, அநுராதபுர மாவட்டங்களை உள்ளடக்கிய வடமத்திய மாகாண உதவி அரசாங்க அதிபராகவிருந்து, அயல் மாகாணங்களான வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள வரைபடம் கீறியவர்.

பண்டாரநாயக்க மறைவின் பின்னர் பிரதமரான டபிள்யு. தஹநாயக்கவின் அரசில், இன்றைய ராஜபக்ச சகோதரர்களின் தந்தையான டி.ஏ.ராஜபக்ச காணி அமைச்சரானார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் இரண்டு தவணை ஆட்சிக் காலத்தில் மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமினி திசநாயக்க திட்டமிட்டு கிழக்கு மாகாண குடிப்பரம்பலை சிங்களத்துக்கு அதிகமாக்கினார்.

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு அரசாங்கமும் தமிழர் நிலங்களையே கண்வைத்து செயற்பட்ட.ன. இந்தக் காலகட்டங்களில் தமிழினத்தின் மீதான படுகொலைகளை சிங்கள பௌத்த தேசம் மெதுவாகவும், தீவிரமாகவும் மேற்கொண்டது.

1956ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் கல்ஓயாவில் இடம்பெற்ற தாக்குதலே தமிழினத்தின் மீது சிங்கள தேசம் நடத்திய முதலாவது தமிழின அழிப்பு என வரலாறுகள் பதிவு செய்துள்ளன. 1949ல் உருவான கல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இங்கே குடியேற்றப்பட்ட சிங்கள குற்றவாளிக் கூலிகளின் குடும்பங்கள், அங்கு ஏற்கனவே காலாதிகாலமாக வாழ்ந்து வந்த 150க்கும் அதிகமான தமிழரை வெட்டியும் குத்தியும் சுட்டும் எரித்தும் கொன்றனர்.

இதே வருடத்தின் அடுத்தடுத்த மாதங்களில் பதவியா, பொலனறுவ, ஹிங்குராங்கொட உட்பட கிழக்கு மாகாணத்தின் சில தமிழர் பகுதிகளிலும் ஆங்காங்கு தமிழர் கொல்லப்பட்டனர்.

1958 தமிழினப் படுகொலை சர்வதேசத்தையும் முதல்முறையாக ஒரு கணம் இப்பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது. தலையை முகர்ந்து நல்லெண்ணை வாசத்தையும், காதில் துவாரமிடப்பட்டிருந்ததையும் அடையாளமாக்கி தமிழரைக் கண்டுபிடித்து அந்தந்த இடங்களில் வைத்தே கொலை செய்தனர்.

கொழும்பு மாவட்டத்தை அடுத்துள்ள பாணந்துறை என்ற இடத்தில் அந்தணர் ஒருவர் உயிருடன் தார்ப்; பீப்பாவில் போட்டு எரிக்கப்பட்டதும், குழந்தையொன்று கண்டதுண்டமாக வெட்டப்பட்டதும், அப்பாவிப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதும் சட்டத்துக்கு உட்படுத்தப்பட்டது போன்று மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள்.

எல்லாள மன்னன் ஆட்சி புரிந்த அநுரதபுரத்தில் வாழ்ந்த தமிழர்களின் உடைமைகள், வயல்கள், வீடு வாசல்கள், நிலபுலன்கள் எரிக்கப்பட்டன. அவர்களை ஓட ஓட விரட்டி அரச பயங்கரவாதம் கொலை செய்தது. கொழும்பில் பிரபல ஊடகவியலாளராகப் பணியாற்றிய தார்சி விதாச்சி எழுதிய 58 எமர்ஜென்சி என்ற ஆங்கில நூல் 1958 தமிழினப் படுகொலைக்கான ஆவணம்.

1958 தமிழினப் படுகொலையே வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற இளைஞனை ஆயுதம் ஏந்திப் போராடத் தூண்டியது என்பதை ஒலி வடிவாகவும், எழுத்து வழியாகவும் கேட்டும் பார்த்தும் வருகிறோம்.

கொழும்பு காலிமுகத்திடலில் தமிழின உரிமை கோரி தமிழ்த் தலைவர்கள் நடத்திய அகிம்சைப் போராட்டத்தை சிங்கள காடையர்கள் என்ற பெயரில் பண்டாரநாயக்கவின் அரசியல் கையாட்களும், சிங்களப் படையினரும் எவ்வாறு தாக்குதல் நடத்தி கலைத்தனர் என்பதும்கூட வரலாறுதான்.

அப்போது வெலிமடை எம்.பியாகவிருந்த கே.எம்.பி. ராஜரட்ண என்பவரே இத்தாக்குதல் அணிக்குத் தலைமை தாங்கியவர். தமிழரின் தோலில் செருப்புத் தைத்து அணிவேன் என்று நாடாளுமன்றத்தில் சூளுரைத்த சிங்கள அரசியல் காடையர்; இவர்;.

1961ல் யாழ்ப்பாணம் கச்சேரி (செயலகம்) முன்னால் சத்தியாக்கிரகம் நடத்திய தமிழ் அரசியலாளர்கள், பொதுமக்கள், மாணவர்களை அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ராணுவத்தை ஏவி விட்டு தாக்குதல் நடத்தி கைது செய்ததும்கூட தமிழினத்தின் மீதான வன்முறையே. இந்தக் கைங்கரியத்தை அப்போது செய்த ராணுவ அதிகாரி றிச்சர்ட் உடுகம, பின்னர் ஈராக்குக்கான இலங்கைத் தூதுவராக நியமனமானதும் வரலாறுதான்.

1977ம் ஆண்டு யூலை மாதம் 21ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் முதன்முதலாக பிரதமரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழருக்கு அளித்த அவரது வெற்றிப் பரிசு தமிழர்கள் மீதான தாக்குதலே. மலையகத்தில் ஆரம்பமாகி தெற்கின் பல இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 300க்கும் அதிகமாக தமிழர் காரணமின்றிக் கொல்லப்பட்டனர்.

தம்மை தர்மி~;டர் என்று கூறிக்கொண்ட ஜே.ஆர்., தம்மி~;டப்படி சிங்களவர் தமிழரைத் தாக்கலாம் என கண்காட்டினார். பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபமும், அயலிலுள்ள பாடசாலைகளும் தமிழர் அகதிகள் முகாம்களாகின. இதன்போதே, தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் உருவானது என்பதும் வரலாறு. 1979ம் ஆண்டிலும் சில தாக்குதல்கள் விட்டு விட்டு இடம்பெற்றன.

1983 யூலைத் தாக்குதல் மூர்க்கத்தனமாகவும், தீவிரமானதாகவும் அமைந்ததற்குக் காரணம் அரசாங்கத்தின் செப்பனிட்ட திட்டமிடலே. ஜே.ஆரின் அமைச்சரவையில் கைத்தொழில் அமைச்சராகவிருந்த சிறில் மத்தியு என்ற சிங்கள இனவெறியரிடம் இக்கைங்கரியம் ஒப்படைக்கப்பட்டது. 1981ல் யாழ்ப்பாணப் பொதுநூலகத்தை அங்கு நின்று எரிவூட்டியவர்கள் சிறில் மத்தியுவும் அவரது சகபாடியான காமினி திசநாயக்கவும் என்பதை நினைவிற் கொள்வோம்.

தெற்கில் – முக்கியமாக கொழும்பு மாவட்டத்தில் வசித்த தமிழர்களின் விபரங்களை தேர்தல் இடாப்பு மூலம் பெற்று ஒரு பட்டியல் தயாரித்தனர். கத்தி, வாள், கோடரி போன்ற ஆயுதங்கள் பல்லாயிரக்கணக்கில் சிறில் மத்தியூவின் அமைச்சின் கீழ் இயங்கிய அத்துறுகிரிய அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் தயாரிக்கப்பட்டது.

தமிழர் மீது தாக்குதல் நடத்த சரியான தருணத்தை ஜே.ஆர். தலைமையிலான சிங்களக் கூட்டம் எதிர்பார்த்திருந்தபோது, 1983 யூலை 23ம் திகதி இரவு தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பலாலி வீதியிலுள்ள தபாற்கட்டைச் சந்தியில் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதல் சரியான தருணமாக அவர்களுக்குத் தெரிந்தது.

இதனை எவ்வாறு ஜே.ஆரின் அணி தங்களுக்குச் சாதகமாக்கியது என்பதற்கு சில சம்பவங்களை நோக்கலாம்.

திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 ராணுவத்தினரின் சடலங்கள் 24ம் திகதி இரவு கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டன. இவைகளை அங்கு எடுத்துச் செல்லாது அவரவர் ஊர்களுக்கு அனுப்பி அவர்களின் ஊர்களிலேயே இறுதிச் சடங்கை நடத்தினால் நிலைமையை கொந்தளிப்பாக்காது கட்டுப்படுத்தலாம் என்ற ஆலோசனை ஜே.ஆருக்கு வழங்கப்பட்டது. முக்கியமாக அப்போதைய பிரதமர் பிரேமதாச இதனை அவருக்கு எடுத்துக் கூறினார்.

அவ்வேளை பொலிஸ்மா அதிபராக இருந்த ருத்ரா ராஜசிங்கமும், மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த ஆர். சுந்தரலிங்கமும் இதே ஆலோசனையை பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஜெனரல் சேபால ஆட்டிக்கலை ஊடாக ஜே.ஆருக்குத் தெரிவித்தனர். ஆனால், ஜே.ஆரும், சிறில் மத்தியுவும் அதனை ஏற்றுக் கொள்ளாது கொழும்பிலேயே 13 ராணுவச் சடலங்களையும் தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

24ம் திகதி இரவு சடலங்களின் வருகையோடு திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆரம்பமானது. தமிழரை விரும்பியவாறு சிங்கள தேசம் பதம் பார்க்க அனுமதிக்கப்பட்டது. எதுவுமே தெரியாதது போலிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, நான்கு நாட்களின் பின்னரே ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார்.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் வட்டுக்கோட்டை தனிநாட்டு தீர்மானத்தை குற்றஞ்சாட்டியதோடு, ஜே.வி.பி.யும் இடதுசாரிக் கட்சிகளுமே இணைந்து தமிழர் மீதான தாக்குதலை நடத்தின என்று பழியைப் போட்டு அவ்விரு கட்சிகளையும் ஜே.ஆர். தடை செய்தார். ஆனால், தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி, உயிரிழப்பு, சொத்தழிப்பு என்பவற்றுக்கு ஒருபோதும் அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. மறந்தும்கூட அனுதாபமும் தெரிவிக்கவில்லை.

யூலை 25ல் ஆரம்பிக்கப்பட்ட 1983இன் தமிழின அழிப்புக்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்னர் – 1983 யூலை 11ம் திகதி இங்கிலாந்தின் லண்டன் டெய்லி ரெலிகிராப் பத்திரிகைக்கு ஜே.ஆர். வழங்கிய சிறப்புச் செவ்வி ஒன்றில் தெரிவித்ததை மீள்வாசிப்புக்கு உட்படுத்தினால், இந்த இனப்படுகொலையை அவர் எவ்வாறு திட்டமிட்டிருந்தார் என்பது தெரியவரும். அவரது வார்த்தைகளில் அந்தச் செவ்வி பின்வருமாறு அமைந்துள்ளது:

‚I AM NOT WORRIED ABOUT THE OPINION OF THE JAFFNA (TAMIL) PEOPLE NOW. NOW WE CANNOT THINK OF THEM. NOT ABOUT THEIR LIVES OR OF THEIR OPINION ABOUT US. THE MORE YOU PUT PRESSURE IN THE NORTH, THE HAPPIER THE SINHALA PEOPLE WILL BE HERE…. REALLY, IF I STARVE THE TAMILS, THE SINHALA PEOPLE WILL BE HAPPY….“

இதன் தமிழாக்கம் பின்வருமாறு: ‚யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்து இப்போது என்னவென்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை. இப்போது அவர்கள் பற்றி நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியோ அல்லது அவர்கள் எங்களைப் பற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளனர் என்பது பற்றியோ சிந்திக்க முடியாது. வடக்கின் மீது எவ்வளவுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு இங்கு சிங்கள மக்கள் மகிழ்வடைவார்கள்… உண்மையில், தமிழரை நான் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் சந்தோசமடைவர்….“

இதுதான் 1983 யூலை 25க்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்னர் ஜே.ஆருக்கு இருந்த மனோநிலை. இதனையே அவர் செயலில் காட்டினார்.

எனக்கு வாக்களித்த சிங்கள பௌத்த மக்களின் நலன்களையே நான் கவனிப்பேன் என்று இன்று கூறும் கோதபாயவுக்கும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?