April 20, 2024

இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

இலங்கைக்கு எதிரான முதல் ரி20 கிரிக்கெட் போட்டில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் ரி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் ரொஸ் வென்ற இலங்கை அணி கப்டன் தசுன் ஷானக பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் பிரித்வி ஷா, வருண் சக்கரவர்த்தி அறிமுகம் ஆனார்கள்.

தொடக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா, துஷ்மந்த சமீர வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் கப்டன் ஷிகர் தவானுடன் சஞ்சு சாம்சன் இணைந்து கவனமாக ஆடினர். சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 27 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

கப்டன் ஷிகர் தவான் 36 பந்துகளை சந்தித்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ஓட்டங்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ஓட்டங்கள் விளாசினார்.

ஹர்திக் பாண்ட்யா 10 ஓட்டங்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது. இஷான் கிஷன் 20 ஓட்டங்களுடனும், குருணால் பாண்டியா 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் சமீர, ஹசரங்க தலா 2 விக்கெட்டுகளும், சமிக ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 165 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கி விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இலங்கை அணி 18.3 ஓவர்களில் 126 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சரித் அசலங்க 44 ஓட்டங்களும், அவிஷ்க பெர்னாண்டோ 26 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களும், தீபக் சாஹர் 2 விக்கெட்களும், குருணல் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக்பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.