April 24, 2024

நல்லுார் உற்சவம் – ஆலயச்சூழலில் வசிப்போருக்கு தடுப்பூசி!

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் ஆலயச்சூழலில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கொரோான தொற்றை கட்டுப்படுத்தி ஆலய திருவிழாவை சிறப்பாக நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நயினாதீவு வெசாக் கொண்டாட்டம் நடத்துவதற்கு முன்னேற்பாடாக சுகாதாரப் பகுதியினரால் நயினாதீவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டதாக வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

அதே போல் நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு ஆலயச்சூழலில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனாத் தடுப்பூசியை பெற்றுக் கொடுத்தால் சிறப்பாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆலய உற்சவத்தில் யாழ் மாநகரசபைக்கு வருமானத்தினை ஈட்டித்தரும் சிறு வியாபாரிகளுக்கும் விசேடமாகத் தடுப்பூசியினை தற்போது வழங்குவது நன்மையளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தினையும் சிறப்பாக நிகழ்த்துவதற்கு சுகாதாரப்பிரிவின் சிறந்த திட்டமிடல் அவசியமாகும் என கூறிய அவர், யாழ்குடாநாட்டிற்கு மேலும் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படின் கொரோனா தொற்றின் பரம்பலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என கூறினார்.

கொரோனா தடுப்பு மருந்துகள் கொரோனா நோயின் தீவிரத்தன்மையினை குறைப்பதில் 90 வீதம் உறுதி உடையவையாகும். இதனால் டெல்டா திரிவின் பாதிப்பினையும் கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.