April 25, 2024

தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருப்பது இந்தியாவே-எதிர்காலம் குறித்து சீனா தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் – சிறிதரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தினை சீனா எதிர்த்தமை தமிழ் மக்களுக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வரலாற்றுக்காலம் முதல் தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருப்பது இந்தியாவே ஆகும்.

அவ்வாறான நிலைமைகளை புரிந்துகொண்டு சீனா தனது எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் ஜென்ஹோங்கிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

 

அக்கடிதத்தின் முழுவடிவம் வருமாறு, கிளிநொச்சி மாவட்டத்தின் ஆதிக் கிராமங்களுள் ஒன்றாக, 2700 வருடங்களுக்கு முன்னைய வரலாற்றையும் தொல்பொருள் அடையாளங்களையும்,  பல்லவர்கால பக்தி இலக்கியமரபைக் கொண்ட மண்ணித்தலை சிவன் கோயில் உள்ளிட்ட மரபுரிமைச் சொத்துக்களையும் கொண்டமைந்துள்ள கௌதாரிமுனை எனும் பழம்பெரும் கிராமத்தின் கடற் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டு கடலட்டைப் பண்ணை எமது மக்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

பரமன்கிராய், கௌதாரிமுனை ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகளையும், வில்லடி மேற்கு, பரமன்கிராய்,  வெட்டுக்காடு, கௌதாரிமுனை, வினாசியோடை, மண்ணித்தலை, கல்முனை ஆகிய உப கிராமங்களையும் உள்ளடக்கியுள்ள கௌதாரிமுனை எனும் பழம்பெரும் கிராமத்தில் தற்போது பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையிலுள்ள 320 குடும்பங்களைச் சேர்ந்த 1012 பேர் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே கடற்றொழிலைத் தமது பிரதான சீவனோபாயமாக கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் தங்கள் நாட்டவர்களால் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணை அவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

பன்னெடுங்காலமாகவே தமிழர்களுக்கும், சீனர்களுக்குமிடையே ஆதிகால பண்பாட்டுத் தொடர்புகள் பேணப்பட்டு வந்ததை வரலாறுகள் எண்பிக்கின்றன. ஆனால் தற்போதைய காலச்சூழலில் சீனர்களால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகள் அனைத்தும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவெறிச் செயல்களால் அனைத்து இயலுமைகளும் அடியோடு அழிக்கப்பட்டு காலம்காலமாக தமது இருப்பைத் தக்கவைப்பதற்காக நிலம் வேண்டிப் போராடும் ஈழத் தமிழர்களிடம் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியையும் இல்லாமற் செய்துள்ளது.

யாழ்குடாநாட்டின் தலைத்தீவுகளான நெடுந்தீவு,  அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் சீன நிறுவனமொன்று மீள் புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் தங்கள் நாட்டினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகர நிர்மாணம் உள்ளிட்ட செயற்பாடுகளும் எமது மக்களிடையே அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர நிர்மாணம் என்பது எமது மக்களின் வாழ்வாதாரத்தை நலிவுறச் செய்வதில் நேரடித் தாங்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மீள் புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லை முனைப் பகுதியான கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணை ஆகியவற்றின் தொழிற்பாட்டினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகப் பிரதேச மக்களும், குருநகர், பாசையூர் பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேசத்தில் முற்றுமுழுதாக பொருண்மியத்தால் நலிவுற்ற குடும்பங்கள்; வாழும் கௌதாரிமுனை, பள்ளிக்குடா, வலைப்பாடு,  கிராஞ்சி, வேரவில், நாச்சிக்குடா, இரணைதீவு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் தமது வாழ்வாதார மூலத்தை முழுமையாக இழக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிப்போரில் சிங்கள பேரினவாதத்தால் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட தமிழ் இன அழிப்புக்கு நீதி வேண்டி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் சீனா வாக்களித்திருந்தமை எமது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமது வாழ்வாதாரத்தையும், இயல்பு வாழ்வையும் பாதிக்கும் வகையில் சீனாவினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய செயற்பாடுகளும், இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையே பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டு வரும் தொப்புள்க்கொடி உறவுநிலையில் விரிசலை ஏற்படுத்தும் விதத்திலான தங்களின் நிலைப்பாடுகளும் ஈழத்தமிழ் மக்களிடையே சீனா மீதான வெறுப்புணர்வை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

எழுபது ஆண்டுகால இனவிடுதலைப் போரினால் நொந்து போன ஈழத்தமிழர்களுக்கு ஆத்மபலமளிக்கும் செயற்பாடுகளை அவ்வப்போது இந்தியாவே மேற்கொண்டு வந்துள்ளது. ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதம் இன அழிப்பை மேற்கொள்கின்றது என்பதை முதன்முதலில் 1984களில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைத்தவர் மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தி தான்.

1987 களில் கைச்சாத்திடப்பட்டு, இன்றும் நடைமுறையிலிருக்கும் இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஊடாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும், தமிழர்களுக்கு அரசியல்த்தீர்வைப் பெற்றுத்தரவும் இந்தியாவே முனைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமானதும், நியாயமானதும், கௌரவமானதுமான அரசியல் தீர்வைப் பெற்றுத்தர இந்தியாவால் மட்டுமே முடியும் என்பது உலகம் புரிந்த விடயமாகும்.

இத்தகைய அரசியற் சூழலில் வடக்கில் தங்கள் நாட்டினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நோக்கிய நடவடிக்கைகள் இந்தியாவை சீண்டுவதாகவும், ஈழத்தமிழர்களை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்து வதாகவும் அமைந்துள்ளது. நான்கு இலட்சத்துக்கு (400,000) மேற்பட்ட பொதுமக்களையும் அறுபதாயிரத்திற்கு (60, 000) மேற்பட்ட மாவீரர்களையும் இந்த மண்ணிலே புதைத்து விட்டு விடுதலை நோக்கிய ஆழ்மன ஏக்கங்களோடு தவித்திருக்கும் எமது மக்களின் உறுதுணையாக இருக்கும் இந்தியாவின் நேரடித் தலையீடின்றி தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்த் தீர்வு கிட்டப்போவதில்லை என்பதில் ஈழத்தமிழர்கள் தெளிவான புரிதலோடுள்ளார்கள்.

2015 செப்டம்பரில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொண்ட போதும் அத் தீர்மானத்தை சீனா எதிர்த்திருந்தமை ஈழத்தமிழர்கள் மத்தியில் சீனா மீதான அதிருப்தியை அதி உச்சமாக்கியுள்ளது. எனவே, ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்திருக்கும் அரசியல் தீர்வுக்கு குந்தகம் இல்லாமல், இந்தியாவின் நேரடித் தலையீட்டால் மட்டுமே தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற அடிப்படை அரசியல் யதார்த்தத்தை புரிந்துகொண்டு, தங்களின் எதிர்கால செயற்பாடுகளை இலங்கையில் மேற்கொள்வீர்கள் என்று அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.