April 20, 2024

வடக்கில் தமிழர், கிழக்கில் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை போராட்டத்திற்கு அழைக்கும் தேரர்.வீடியோ,,

அரசாங்கம் நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது, அதனால் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்

கொள்வதற்காக அனைத்து இன மக்களும் அன்று போராடியது போன்று தற்போது இரண்டாவது சுதந்திர விடுதலைக்கான போராட்டத்திற்கு அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஆளும் அரசாங்கம் வரலாற்றில் எந்த அரசாங்கமும் செய்யாத அளவுக்கு இந்த நாட்டை விற்று சாப்பிடும் முறையை ஆரம்பித்து தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வானம் மற்றும் கடல் இரண்டு இடங்களிலும் எமக்கு பிரச்சினை இருக்கின்றது.

எமக்கு துரதிர்ஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது நாங்கள் பல வெளிநாட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவில்லை. கைச்சாத்திட்டிருந்தால் இன்னும் பல பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் ஏகாதிபத்தியவாதிகள் எமது பல கனிம வளங்களை கொள்ளை அடிப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.

சீனர்கள் இங்கு வந்து எமது குளங்களை தோண்டுகின்றனர். குளங்களில் கனிம வளங்களை கொள்ளையடித்து கொண்டு போகின்றார்கள். நீர்ப்பாசனம் என்பது எமது பெரும் வளமாகும்.

இவ்வாறான தேசிய வளங்களுக்கு கைவைக்க இடமளித்து இந்த அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த அளவு தேசிய வளங்களை அழிப்பவர்களை அரசாங்கம் கைது செய்ததா இல்லை! அரசாங்கம் இரண்டு சட்டங்களில் செயல்படுகின்றது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் மோசமாக இருக்கிறது. அரசாங்கம் இவ்வாறு வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து அவர்களைத் திருப்திப்படுத்த நாட்டு மக்களுக்கு குழி பறிப்பதாக இருந்தால் நாங்கள் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க கூடாதா என நான் கேட்கின்றேன்.

1948இல் இந்த நாட்டின் சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து இன மக்களும் அன்று ஒன்றிணைந்தார்கள். அதே போன்று தற்போது ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க இரண்டாவது சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கும் ஒன்றிணைய வேண்டும்.

இதற்காக ஒன்றிணைவதற்கு வடக்கில் தமிழ் மக்கள், கிழக்கில் முஸ்லிம் மக்கள் உட்பட நாட்டில் இருக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து கைகோர்த்து கொள்வதற்காக கலந்துரையாடி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்