März 28, 2024

விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூருவதை தடுக்க திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனின், அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென, அரசாங்கத்தின் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை நினைவு கூரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஏன் நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல்லவிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த அவர்,

தமிழீழ வீடுதலைப் புலிகள் அல்ல – யாராக இருந்தாலும் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் நினைவு நிகழ்வுகளை நடத்துவதில் எவ்வித பிரச்சினையுமில்லை.

எனினும் பொதுவான நிகழ்வுகளை நடத்துவதில் பிரச்சினை காணப்படுகின்றது. நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதியளிக்க முடியாது.

அவ்வாறு உறுதியளித்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தொடர்பில் ஏதாவது கருத்துக்களை உறுப்பினர்கள் வெளிப்படுத்துவார்கள் எனின் சபாநாயகர் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பார்.

ஆகவே கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னரே தீர்மானம் மேற்கொள்ள முடியும்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் சில விடயங்களுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும், எனினும் அதே விடயத்திற்கு நாடாளுமன்றத்திற்குள் நடவடிக்கை எடுக்க முடியாது. அவ்வாறு அதில் மாற்றம் கொண்டுவர வேண்டுமெனின் நாடாளுமன்ற யாப்பினை மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கு ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் கூறுங்கள் நாம் அது தொடர்பில் அவதானம் செலுத்துகின்றோம் என்றார்.