April 20, 2024

இந்தியாவுக்கு வர விரும்பும் 5லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாத இலவச விசா

கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில் துறைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். அவசரகால எதிர்வினைகளுக்கு சுகாதார அமைப்புகளை தயார்படுத்துவதும், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஊக்கம் அளிப்பதும் இந்த நடவடிக்கைகளின் இதர நோக்கங்களாகும். மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், நிதி செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நிவாரண தொகுப்பு குறித்த அறிவிப்பின் போது உடனிருந்தனர்.

ரூ 6,28,993 கோடி மதிப்பிலான 17 நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரு நடவடிக்கைகளான டிஏபி மற்றும் பி&கே உரங்களுக்கு கூடுதல் மானியம் மற்றும் பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை 2021 மே முதல் நவம்பர் வரை நீட்டித்தல் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். இன்று அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 3 விரிவான பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன:

1. பெருந்தொற்றில் இருந்து பொருளாதார நிவாரணம்

2. பொது சுகாதாரத்தை வலுப்படுத்துதல்

3. வளர்ச்சி & வேலைவாய்ப்புக்கு புத்தாக்கம்

I. பெருந்தொற்றில் இருந்து பொருளாதார நிவாரணம்

இன்று அறிவிக்கப்பட்ட 17-ல் 8 திட்டங்கள் கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழில்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன. சுகாதாரம், பயணம் மற்றும் சுற்றுலா துறைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

i. கொவிட்டால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ 1.10 லட்சம் கோடி கடன் உத்தரவாத திட்டம்

இந்த புதிய திட்டத்தின் கீழ், கூடுதலாக ரூ 1.1 லட்சம் கோடி கடன் தொழில்களுக்கு வழங்கப்படும். ரூ 50,000 கோடி சுகாதார துறைக்கும், ரூ 60,000 கோடி சுற்றுலா உள்ளிட்ட இதர துறைகளுக்கும் வழங்கப்படும்.

ii. அவசர கால கடன் உத்தரவாத திட்டம்

2020 மே மாதம் தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தை ரூ 1.5 லட்சம் கோடி மதிப்பில் விரிவாக்க அரசு முடிவெடுத்துள்ளது.

பெரும் வரவேற்பு பெற்ற இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே ரூ 2.73 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 2.10 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் கிழ், ஒவ்வொரு கடனின் நிலுவை தொகையின் 20 சதவீதம் அளவுக்கு ஏற்கனவே உள்ளதை விட உத்தரவாதம் மற்றும் கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

iii. குறு நிதி நிறுவனங்களுக்காக கடன் உத்தரவாத திட்டம்

இன்று புதிதாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம், குறு நிதி நிறுவனங்களிடம் சேவை பெறும் மிகவும் சிறிய அளவிலான கடன் பெறுவோரின் நலனை நோக்கமாக கொண்டதாகும்.

சுமார் 25 லட்சம் சிறிய அளவிலான கடன் பெறுவோருக்கு ரூ 1.25 லட்சம் வரை கடனாக வழங்குவதற்கு புதிய அல்லது ஏற்கனவே உள்ள குறு நிதி நிறுவனங்களுக்கு வர்த்தக வங்கிகள் கடன் வழங்க உத்தரவாதம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உத்தரவாத கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

iv. சுற்றுலா வழிகாட்டிகள்/பங்குதாரர்களுக்கான திட்டம்

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையினருக்கு இத்திட்டத்தின் கீழ் மூலதன/தனிநபர் கடன்கள் வழங்கப்படும். இதன் மூலம் 10,700-க்கும் அதிகமான பிராந்திய சுற்றுலா வழிகாட்டிகள் (சுற்றுலா அமைச்சகம் மற்றும் மாநில அரசு அங்கீகாரம் பெற்றவர்கள்) மற்றும் சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 1,000 பயண மற்றும் சுற்றுலா பங்குதாரர்கள் பயனடைவர்.

5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச ஒரு மாத விசா

சுற்றுலா துறைக்கு ஊக்கமளிக்கும் மற்றுமொரு திட்டமாக, இந்தியாவுக்கு வர விரும்பும் 5லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச ஒரு மாத விசா வழங்கப்படும். 2022மார்ச் 31 வரை அல்லது 5 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் வரை இத்திட்டம் அமலில் இருக்கும். இதன் மொத்த மதிப்பீடு ரூ 100 கோடி ஆகும்.