April 18, 2024

கொரோனாவுக்கு எதிரான யுத்தம்: தடுப்பூசி எனும் பேராயுதம் ஏந்தியவர்கள் 262 கோடி பேர்

கண்ணக்குத் தெரியாமலே, உலகம் முழுக்க மனிதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வரும் கொரோனா வைரஸ் எனப்படும்  பெருந்தொற்று சீனாவில் உருவாகி, ஒன்றரை ஆண்டுக்கு மேலாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.

அதில் இருந்து தப்பிக்க ஊரடங்கு என்னும் போர்வை போர்த்தி வந்த உலகம், இப்போது அறிவியல் உலகம் கண்டு பிடித்துக்கொடுத்த தடுப்பூசி என்னும் பேராயுதம் கொண்டு கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறது.

ஸ்புட்னிக்-வி, பைசர், மாடர்னா, கோவிஷீல்டு, கோவாக்சின், ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட அந்த பேராயுதங்கள் துணையுடன் கொரோனாவுக்கு எதிரான யுத்தம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், உலக அளவில் இதுவரை 262 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஒட்டு மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நூறு பேரில் 34 பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளின் அரசுகளால் அளிக்கப்படும் புள்ளி விவரங்களைத் திரட்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, கண்டங்கள், நாடுகள் என பல பகுதியாகப் பிரிக்கப்பட்டு, இந்த தடுப்பூசி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஆப்பிரிக்க கண்டத்தில்  தடுப்பூசி செலுத்தும் திட்டம் மற்ற கண்டங்களைக் காட்டிலும் மிக மெதுவாக செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில நாடுகளில் இன்னமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மிகப்பெரிய அளவிலான முகாம்கள் தொடங்காமலேயே உள்ளன.

இந்தியாவில் 28 கோடி பேர்

உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கெசாண்டுள்ள  262 கோடிப் பேரில், ஜூன் 21&ந் தேதி நிலவரப்படி 28,00,36,898 பேர், அதாவது 28 கோடிப் பேர் இந்தியர்கள்.

இந்தியாவில் நூறு பேரில் 20 பேர் தடுப்பூசி செலுத்திக் கொணடுள்ளனர். ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 16 சதவீதமாகவும், இரண்டு தவணையையும் செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 3.6 சதவீதமாகவும் உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  30,39,996 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

சீனாவில் 100 கோடி பேர்

உலக மக்கள் தொகையில் முதல் இடம் வகிக்கும் சீனாவில் 100 கோடி மக்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது .என்றாலும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை சீனா வெளியிடவில்லை. உலகம் முழுதும் கொரோனாவைப் பரப்பி விட்டு தான் மட்டும் பாதுகாப்பாக வெளியே வந்து விட்டது என்று உலக அளவில் கடும் விமர்சனங்களை சீனா சந்தித்து வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி குறித்து சினுவா செய்தி நிறுவனம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

”உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 7 கொரோனா தடுப்பூசிகளுக்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் குழந்தைகளுக்குச் செலுத்தும் தகுதியுடையவை. இதன் காரணமாக கடந்த 5 நாட்களில் சீனாவில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், முதல் முறையாக சீனாவில்தான் 100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை 43%க்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகத்தான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.”

இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.