April 24, 2024

தலைமை:அடுத்த தலைமுறைக்கும்!

விடுதலைப்போராட்டம் அதன் தலைமை பற்றி அடுத்த சந்ததி அறிந்து கொள்ள கூடாதென இலங்கை அரசும் அதனது புலனாய்வு கட்டமைப்புகளும் குத்தி முறிந்துவருகின்றன.

கட்டுப்பாடற்ற போதை பொருள் மற்றும் கலாச்சார சீரழிவுகளை அவிழ்த்துவிட்டுள்ள போதும் இளம் சமுதாயம் தமது பாதையினைன தெளிவாக தெரிவு செய்துவருகின்றது.

போராட்டம் மௌனிக்கப்பட்ட போது நான்கே வயதான சிறுவன் ஒருவன் தேசிய தலைவரது புகைப்படத்துடன் கைதாகியமை கவனத்தை ஈர்த்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை, அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 14 வயதான சிறுவனும் அவருடன் தங்கியிருந்த 21 வயதான மற்றுமொரு இளைஞரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தலா ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில், இவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு, புத்தளம் பதில் நீதவான், நேற்று (22) மாலை உத்தரவிட்டுள்ளார்.

நுரைச்சோலை பொலிஸாரால் நேற்று முன்தினம் (21)  கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள இருவருமே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுள் ஒருவரான சிறுவன், வாகரை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் கற்பிட்டி- நுரைச்சோலை பிரதேசத்திலுள்ள புகையிலை உற்பத்தி செய்யும் பண்ணைக்கு தொழிலுக்காக வந்தாகவும், இதன்போது நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபரின் அலைபேசியை சோதனை செய்த போது, அதில் பிரபாகரனின் புகைப்படங்கள் இருந்துள்ளன.

இதனையடுத்து 14 வயது சிறுவனை கைதுசெய்த பொலிஸார், அவருடன் தங்கியிருந்த 21 வயதான மற்றுமொரு இளைஞரையும் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.