April 16, 2024

1939ல் சட்டசபையில் கூறப்பட்டது, 2020ல் நாடாளுமன்றில் எதிரொலிக்கிறது! பனங்காட்டான்

“இது எங்கள் தாயகம். நாங்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். இந்த நாட்டில் சிங்கள மக்களைப் போன்று அரசியல் ரீதியாகவும், ஏனைய வழிகளிலும் நிரந்தரமான அறுதி உரிமைப் பற்றினைக் கோரக்கூடியவர்களுமான பிரஜைகள் நாம். விரும்பத்தகாத வேற்றுக்கிரகவாசிகள் போல நடத்தப்படுவதை நாங்கள் விரும்பப்போவதில்லை. நாசிசவாதிகளின் மாநிலங்களில் செமித்தியர்கள் புடம்பிரித்து தள்ளிவைக்கப்பட்டது போன்று நாங்கள் நடத்தப்படுவதை ஒருபோதும் நாங்கள் பொறுத்துக் கொள்ளப்போவதில்லை“ – 1939ல் இலங்கை சட்டசபையில் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆற்றிய உரையின் முக்கிய பகுதி. 

கோதபாய ஜனாதிபதி ஆட்சியிலான முதலாவது பொதுத்தேர்தல் முடிவடைந்து ஒரு மாதமாகிவிட்டது. அதனுடன், ராஜபக்ச குடும்பத்தின் அதிராட்டமும் ஆரம்பமாகிவிட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்போது எதனையெல்லாம் கோதபாய நினைத்தாரோ, அதற்கெல்லாம் இப்போது செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். அதற்காக தன்னைச் சுற்றி பலமான அரணாக மூன்று சகோதரர்களை நிறுத்தியுள்ளார்.

தேர்தலின் பின்னரான காலம் மூன்று தரப்பின் விடயங்களை கூர்மைப்படுத்தியுள்ளது.

அரசியல் சட்டத்திருத்தம், புதிய அரசியலமைப்பு, விருப்பத்துக்குரிய நாடாளுமன்ற நிர்வாகம் என்பவற்றில் ஆட்சித்தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மறுதரப்பில் தமிழர் தரப்பில் தெரிவான விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும், கடந்த பத்து வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறவிட்ட அல்லது சரணாகதி அரசியலில் செய்ய விரும்பாது விட்ட விடயங்களை நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக வேகப்படுத்துகின்றனர்.

இதனை நேரில் தரிசிக்க விரும்பததால்போலும் சம்பந்தனும் சுமந்திரனும் வெவ்வேறு காரணங்களைக் கூறி இயலுமானவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை தவிர்த்து வருகின்றனர். கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள பதவிப் போட்டிகளுக்கு தீர்வுகாண முடியாத நிலையும் இவர்களின் தவிர்ப்புக்கான இன்னொரு காரணமாக இருக்கலாம்.

ராஜபக்ச குடும்பம் கைப்பற்றி வைத்துள்ள சிங்கள பௌத்த வாக்குகளை தங்கள் பக்கம் வசியப்படுத்துவதற்காக சஜித் பிரேமதாச தரப்பு, தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக இனவாதம் கக்கும் தீப்பந்தங்களை கையில் ஏந்தி சுழன்றாடுகின்றது.

இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளால் கௌரவம் காப்பாற்றப்பட்ட சரத் பொன்சேகாவும், சஜித் பிரேமதாசவும் தங்கள் சுயரூபத்தைக் காட்ட தொடங்கியுள்ளனர். தமிழருக்கு எதிராக குரல் எழுப்பினால் மட்டுமே ஆட்சியைக் கைப்பற்றலாமென்ற போக்கு சட்டசபைக் காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தரப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு தமிழின வதைகளையும், தமிழின அழிப்புகளையும் தொடர்கதையாக்கிய வரலாறு நீள்கிறது.

இனி, இவ்விடயங்களை சற்ற விரபரமாகப் பார்க்கலாம். 1978ல் ஜே.ஆர். பிரகடனப்படுத்திய அரசியலமைப்புக்கு அவரே கொண்டு வந்த ஆறாவது திருத்தம் தமிழர்களை இலக்கு வைத்தது. அரச ஊழியர்களிலிருந்து அரசியல்வாதிகள்வரை தமிழர் தாயகம், தமிழர் தேசியம் என்பவைகளை உச்சரிப்பதையே தடைசெய்யும் சட்டத்திருத்தம் இது.

மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வழிவகுப்பதற்கென பதினெட்டாவது திருத்தத்தைக் கொண்டுவந்தார். எனினும் மூன்றாவது தேர்தலில் தோல்வியையே கண்டார்.

மகிந்த குடும்பத்தினரை முழுமையாக ஜனாதிபதித் தேர்தலில் ஓரங்கட்டவென ரணில் தரப்பினால் (ஜனாதிபதி சிறிசேன கண்களை மூடிக்கொண்டிருக்க) உருவாக்கப்பட்டது. பத்தொன்பதாவது திருத்தம்.

முக்கியமாக, இரு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற திருத்தம் மகிந்தவுக்கானது. முப்பத்தைந்து வயதுக்குட்பட்டவர்கள் ஜனாதிபதி தேர்தலில்போட்டியிட முடியாதென்பது நாமல் ராஜபக்சவுக்கானது. இரட்டைப் பிராஜாவுரிமை உள்ளவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதென்பது கோதபாய – பசில் சகோதரர்களுக்கானது.

கோதபாய அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்துச் செய்துவிட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரென்று ரணிலோ சிறிசேனவோ கனவிலும் நினைத்திருக்கவில்லை. அரசியலில் கனவுகள் எப்போது நனவாவதில்லை.

பசிலின் ஆளுமையில் கோதபாய ஜனாதிபதியாக மகிந்த பிரதமராகி, பத்தொன்பதாவது திருத்தத்தின் பல அம்சங்களை நீக்கி, புதிய இருபதாவது திருத்தம் சட்டமா அதிபரின் அனுசரணையுடனும் அமைச்சரவையின் ஆதரவுடனும் விசேட வர்த்தமானியில் பிரசுரமாகிவிட்டது.

இதனை ஆட்சேபித்து எவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவில்லையென்றால் இந்த மாதத்தின் நடுப்பகுதிக்கு பின்னர் இது நாடாளுமன்றதில் தாக்கலாகி இலகுவாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறும்.

கோதபாய ஜனாதிபதியானவுடனேயே இருபதாவது திருத்தத்தை தாயரிக்க தொடங்கிவிட்டாரென்றும், நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்ற பின்னரே அதனை வெளியிட்டாரெனவும் கொழும்பு ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன. இது ஒருவகை தன்முனைப்புச் சர்வாதிகாரம்!

இத்திருத்தத்தை இவ்வளவு வேகமாக முன்னெடுக்க வேண்டிய தேவை கோதபாயவுக்கு ஏன் ஏற்பட்டது?

முதலாவது – பத்தொன்பதாவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வகிக்க முடியாது. ஆனால் கோதபாய பாதுகாப்பு அமைச்சை தாமே கொண்டிருக்க விரும்புகிறார். முப்படைகளையும் காவற்துறையையும் உள்ளடக்கிய அமைச்சு இது. குறிப்பிட்டுச் சொல்வதானால் மகிந்தவிடம்கூட இந்த அமைச்சை ஒப்படைக்க அவர் தயாரில்லை (நம்பிக்கையில்லை).

கடந்த மாதம் புதிய அமைச்சரவையை நியமித்தபோது பாதுகாப்பு அமைச்சராக எவரையும் நியமிக்காது, அதனை வெற்றிடமாக வைத்திருந்தது இருபதாவது திருத்தத்துக்காகவே.

இரண்டாவது – பத்தொன்பதாவது திருத்தத்தின்கீழ் அமைச்சரவை எண்ணிக்கை முப்பதுக்குமேல் இருக்க முடியாது. ஆனால் இருபதாவது திருத்தத்தின் கீழ் விரும்புகின்ற எத்தனை பேரையும் (150 பேரைக்கூட) அமைச்சர்களாக நியமிக்கலாம்.

பத்தொன்பதாவது திருத்தத்தின்படி சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனங்களில் ஜனாதிபதி தலையிட முடியாது. ஆனால் இருபதாவது திருத்தத்தின் கீழ் குழுக்களின் உறுப்பினர்களையும் தலைவர்களையும் நியமிப்பார். பிரதம நீதியரசர் மற்றும் பொலிஸ்மா அதிபர் நியமனங்களையும் ஜனாதிபதியே மேற்கொள்வார்.  (சுயாதீனம் என்பது இதன்மேல் பேச்சில் மட்டும்தான்.)

நாடாளுமன்றத்தை ஒரு வருட முடிவில் கலைக்கவும், பிரதமரை விரும்பும் வேளையில் பதவி நீக்கவும்கூட ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கிறது.

மூன்றாவது – அரசியல் யாப்பு பேரவையில் முன்பிருந்த சிவில் சமூக பிரதிநிதிகளுக்கான மூன்று இடங்களும் இனி இருக்காது. பாராளுமன்றப் பேரவையின் ஐந்து உறுப்பினர்களில் மூவர் அரசாங்க தரப்பினர். இதற்கும் அப்பால் ஜனாதிபதிக்கான நேர்முக மறைமுக அதிகாரங்களைக் கொண்ட மேலும் பல அரச சார்பு மாற்றங்கள் இருபதாவது திருத்தத்தில் உள்ளடக்கம்.

மொத்தத்தில் ஜனாதிபதி என்னும் ஜனநாயக இராணுவ ஆட்சியாளர் ஒருவரின்கீழ் சகல நிறைவேற்று அதிகாரங்களும் குவிக்கப்படுகிறது. இவ்வகையான ஷவியத்மக| உருவாக்க அரசியல் என்பது ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற எதேச்சாதிகார திரட்சியைக் கொண்டது.

கோதபாயவின் நாடாளுமன்ற கொள்கை விளக்க உரையில், ஒரு நூற்றாண்டை எட்டிச் செல்லும் இலங்கையின் இனப்பிரச்சனை அதற்கான அரசியல் தீர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை என்பதை நோக்கின் அரசியல் திருத்தம் ஏன் என்பதை புரிந்து கொள்வது இலகு.

தமது இலக்கை நோக்கி இவர் ஏற்படுத்தும் அரசியல் சட்ட மாற்றமானது மகிந்தவுக்கு முழுமையாக ஏற்புடையதன்று. தமக்கும் தமது புத்திரருக்கும் எதிர்கால அரசியலில் சாதகமாக இது அமைய மாட்டாது என்பதைப் புரிந்து கொண்ட போதிலும், சூழ்நிலையின் கைதியாக அவரை அமர்த்தியுள்ளது.

இவ்வாறான ஓர் அரசியல் காலநிலை சண்டமாருதமாக தெற்கில் உருவாகியுள்ள நிலையில் தமிழ்த் தேசிய அரசியல்போக்கு எவ்வாறுள்ளது? விக்கி – கஜன் இணையரின் கனல் பறக்கும் உரைகள் சிங்களத் தரப்பில் மட்டுமன்றி தமிழர் தரப்பில் கூட்டமைப்பினரையும் நிலைதடுமாறச் செய்துள்ளது.

எப்படியாவது வின்னேஸ்வரனின் குரலை நசுக்க நாடாளுமன்ற ஒழுங்குமுறை, நீதிமன்ற சட்டமுறை என்பவற்றினூடாக பெரும் பிரயத்தனம் எடுக்கப்படுகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தை சிங்கங்களின் குகை என்பர். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை இலங்கை அரசியலில் கிழட்டு நரி என்பர். அப்படியென்றால் விக்னேஸ்வரனை கிழட்டுப் புலி என்று கூறுவதில் தவறிருக்க முடியாது. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதுபோல, தமிழ் தேசிய கொள்கையில் இவர் விடாக்கண்டனாக இருப்பதால் புலி என்ற பதம் இவருக்கு மிகப் பொருத்தமானது.

இவர் தமது முதலுரையில், ஷதமிழ் மூத்த மொழி., நாம் பூர்வீக குடிகள்| என்ற கூற்றே இப்போது பூதாகரமாகி சிங்கள தேசத்தை ஆட்டிப்படைக்கிறது. இவ்விடத்தில் சிங்களத் தேசத்தவர்களின் ஞாபகப்படுத்தலுக்காக 1939ம் ஆண்டு இலங்கை சட்டசபையில் ஒலித்த ஒரு குரலை அப்படியே ஆங்கிலத்திலும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் கீழே இணைத்துள்ளேன்.

‚இது எங்கள் தாயகம். நாங்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். இந்த நாட்டில் சிங்கள மக்களைப் போன்று அரசியல் ரீதியாகவும், ஏனைய வழிகளிலும் நிரந்தரமான அறுதி உரிமைப் பற்றினைக் கோரக்கூடியவர்களுமான பிரஜைகள் நாம். விரும்பத்தகாத வேற்றுக்கிரகவாசிகள் போல நடத்தப்படுவதை நாங்கள் விரும்பப்போவதில்லை. நாசிசவாதிகளின் மாநிலங்களில் செமித்தியர்கள் புடம்பிரித்து தள்ளிவைக்கப்பட்டது போன்று நாங்கள் நடத்தப்படுவதை ஒருபோதும் நாங்கள் பொறுத்துக் கொள்ளப்போவதில்லை“. – (ஹன்சாட் 1939, தொகுதி 890.)

(This is our home. We are inhabitants of this country and we have as much right to claim to have permanent and vested interests in this country, politically and otherwise, as the Sinhalese people. We do not propose to be treated as undesirable aliens. We will not tolerate being segregated into ghettos and treated like Semites in the Nazi states.  – Hansard 1939, Col.890)

இந்தக் குரலுக்குரியவர் தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.ஜி.பொன்னம்பலம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாரின் பாட்டனார் இவர். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் தந்தை என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஆணித்தரமான இந்த உரைக்கு பதிலளிக்கும் வகையில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க 1939ல் பலப்பிட்டிய என்ற இடத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது பின்வருமாறு கூறினார்:

‚நான் எனது இனமான சிங்களவருக்காக எனது உயிரைக் கொடுக்கவும் தயாராகவுள்ளேன். எங்கள் முன்னேற்றத்தை எவராவது தடுக்க முனைந்தால் அவர் (ஜி.ஜி. பொன்னம்பலம்) மறக்கமுடியாதவாறு பாடம் புகட்ட தீர்மானித்துள்ளேன்“ என்று இவர் கர்ச்சித்தார்.

இதனைக்கூறிய பண்டாரநாயக்க இரண்டாண்டுகளின் பின்னர் புத்த பிக்கு ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டது பிறிதொரு கதை.

வரலாறு மீண்டும் சுழல்கிறதா? அல்லது பிறக்கிறதா? அல்லது புதுப்பிக்கப்படுகிறதா?