März 28, 2024

மட்டக்களப்பில், பொலிசாரின் தடையை மீறி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தினர்.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நினைவு தினத்தை, முன்னிட்டு இன்று (30.08.2020) வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், கவனயீர்ப்பு பேரணிகள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடிப்பாலம் தொடக்கம் காந்திப்பூங்காவரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி பொலிசாரின் தடை காரணமாக தாமதமானதுடன், பொலிசாரால், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கதலைவி த. செல்வராணியவர்களை கைது செய்ய மேற்கொண்ட முயற்சி பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டதாக கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும, கல்லடிப்பாலத்தின் அருகே உள்ள புனித செபஸ்ரியான் ஆலயத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது நிறுவன பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் கூடியிருந்தனர். அங்கு வருகைதந்த பொலிசாரால் ஆலய பிரதான வாசம் மூடப்பட்டதுடன், பேரணிக்கு எதிரான நீதிமன்ற தடையுத்தரவு பொலிசாரால் வாசிக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொள்ளாத மக்கள் பிரதிநிதிகள், தடையுத்தரவானது மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தலைவிக்கே வழங்கப்பட்டுள்ளது எனவும், அத்தடையுத்தரவில் குறிப்படப்பட்ட விடயங்கள் இப்பேரணிக்கு பொருத்தமற்றவை என வாதிட்டதுடன், பொலிசாரின் தடையை மீறி பேரணியை நடாத்தினர்.
இப்பேரணி திட்டமிட்டபடி காந்திப்பூங்காவை அடைந்ததும் , அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கதலைவி த. செல்வராணி அவர்களால் அறிக்கை வாசிக்கப்பட்டதுடன், சமய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்ப்டவர்களின் தலைவி திருமதி அமலநாயகி அமல்ராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது ‚மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு பேரணியினை தடுக்கும் முகமாக மட்டக்கப்பு பொலீசாரினால் நீதிமன்ற தடை உத்தரவு நேற்றைய தினம் (29.08.2020) மட்டக்களப்பு மாவட்ட தலைவி திரு. ஆமலநாயகிக்கு வழங்கப்பட்டதாகவும், அதில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீளுருவாக்கத்திற்கும், கொரோனா பரவலுக்கும் காரணமாக அமைந்து விடும் எனவும் தெரிவித்து தனக்கு மட்டும் இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்ததுடன், தான் முற்கூட்டியே இப்பேரணி தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பொலிசாருக்கு கடிதம் வழங்கி நேரடியாக சென்று அனுமதி கோரியதாகவும், அவர்கள் வாய்மொழிமூல அனுமதி கிடைத்த பின்னரே பேரணிக்கான ஏற்பாடுகளை செய்ததாகவும், அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் இத்தடைளுத்தரவு கிடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இது போன்றதொரு சம்பவம் ஏற்கனவே செங்கல்லடியில் இடம்பெற்றதாக தெரிவித்ததுடன் புதிய அரசாங்கம் ஜனநாயகத்தை துளியும் மதிக்காது என்பது இது போன்ற செயற்பாடுகள் ஊடாக தெரியவருவதாகவும், மக்களின் காவலளர்களாக செயற்படவேண்டிய பொலிஸ் காவல் துறையினர் அரசாங்கத்தின் ஏவலாட்களாக செயற்படுவதே அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை எனவும், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கூட பல வருடமாகியும் கண்டு பிடிக்காத பொலிசார் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்படுவது போல் எம்மை தடுப்பதும், விடுதலைப்புலிகள் என முத்திரை குத்துவதும் நீதியின் காவலளர்களாக செயற்படாது அநீதியான முறையில் எம்மை அச்சுறுத்துவதும் உள்ளக பொறிமுறைக்கும் எம்மால் நீதியை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனை சர்வதேசத்திற்கு உணர்தியிருக்கும் சம்பவங்களில் இதுவும் ஒன்று என தெரிவித்தார்.
இப்பேரணியில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து பொண்டு அரசுக்கெதிராகவும் , அடக்குமுறைக்கு எதிராகவும், சர்வதேச விசாரணை கோரியும் கோசமெழுப்பியதை காணக்கூடியதாக இருந்ததுடன், ஐ.நா வுக்கு கையளிக்கும் வகையில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க அறிக்கையானது மட்டக்களப்பு மாவட்ட குருமுதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.