März 29, 2024

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினை சிதைக்க முயற்சி?

 

வடகிழக்கில் பலத்துடன் போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்

கட்டமைப்புக்களை சிதைக்க அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் களமிறங்கியுள்ளதாக குடும்பங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

ஏதிர்வருகின்ற 30 ஆம் தேதி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நீதி வேண்டியும் அவர்களை மீட்டுத்தர வேண்டுடியும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இப்போராட்டத்தை குழப்பியடிக்க மாற்று அமைப்பொன்றை நிறுவியுள்ள அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் அதே நாளன்று யாழ்.நகரில் தாங்களும் பேரணியொன்றை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரச ஆதரவு தரப்புக்களுடன் பின்கதவு உறவுகளை வைத்திருந்ததாக சொல்லப்படும் பெண்மணியொருவரே நேற்றைய தினம் ஊடகங்களை அணுகி தமது பேரணி தொடர்பில் செய்திகளை பிரசுரிக்க கோரிய போதும் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட ஊடகங்களை அதனை பொருட்படுத்தவில்லை.

அதேவேளை தமது ஊடகப்பேச்சாளர் என தெரிவித்து நபர் ஒருவரது புகைப்படத்தை பிரசுரிக்கவும் கோரியிருந்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில் ஊடகங்களால் கண்டு கொள்ளப்படாத நிலையில் அரச புலனாய்வு கட்டமைப்பினால் இயக்கப்படும் தொலைக்காட்சி அலுவலகமொன்றில் இன்று ஊடகசந்திப்பென்ற பேரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களது போராட்டத்தை சிதைக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையேகால அவகாசம் கொடுக்காது இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்து எமக்கு சர்வதேசம் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என  வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு  வலிந்து காணாமல்  சங்கத்தலைவி யோகராசாh கனகரஞ்சனி நாங்கள் எங்களுடைய உறவுகளை தேடுகின்ற காலந்தொட்டு இன்றுவரை எம்மை கொச்சைப்படுத்த அரச தரப்புக்கள் பல முயற்சிகள் எடுத்து வருகின்றன. இந்த போர்க்குற்றத்தை நிராகரித்து போர்குற்றம் ஒன்று இலங்கையில் நடைபெறவில்லை என்று கூட பேசி வந்தார்கள் .போர் குற்றம் இடம் பெற்றமைக்கான ஆதாரம் இல்லை என்று கூட கூறியிருந்தார்கள் ஆனால் யுத்தம் நடந்த பிற்பபாடு கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கை அரசை நம்பி ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று  கூறும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது.

ஆட்சி மாற்றங்கள் வரலாம் அரசு மாறலாம் ஆனால் எங்களுடைய  உறவுகளுக்கான நீதி  வரும் வரைக்கும் நாங்கள் இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை இதை சர்வதேசம் கவனத்தில் கொண்டு இலங்கை அரசிற்கு அழுத்தத்தைக் கொண்டு கால அவகாசம் கொடுக்காமல் எங்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் வருகின்ற 30 ஆம் தேதி காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கான நீதி வேண்டியும் அவர்களை மீட்டுத்தர வேண்டுடியும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ளது

நாங்கள் எமது வீடுகளில் உட்புகுந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை தேடி கொண்டு வருக்கின்றோம்.இதற்கு இலங்கை அரசு எந்த தீர்வும் வழங்காது 14 ஆண்டுகளாக சிரித்துக் கொண்டு இருக்கின்றது.

எங்களுக்கான ஒரு நீதியை இன்று சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் அதற்கான இந்த தூய்மையான உன்னதமான இந்த போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற எங்களுடைய உறவுகளும் அந்தந்த நாடுகளிலேயே எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.