April 16, 2024

உண்மையினை சொன்ன சம்பந்தன்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையில் திருகோணமலையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இச்சந்திப்பு நேற்று மாலை 4.30 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் பின்னரான செய்தியாளர் சந்திப்பின் போது இரா சம்பந்தன் விளக்கமளித்தார்.

இச்சந்திப்பின் போது நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடியதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வட கிழக்கில் அடைந்த பின்னடைவுக்கான காரணங்கள் தொடர்பாக தாம் அவர்களுக்கு விளக்கங்களை அளித்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகள், தேசிய கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக நடந்து கொண்ட அல்லது மக்கள் மத்தியில் கொடுக்கப்பட்ட உதவிகள், பண உதவிகள் ஏனைய நடவடிக்கைகள் அத்துடன் விருப்பு வாக்குகள் என்று சொல்லப்படுகின்ற வேட்பாளர்கள் தங்களுடைய வாக்குகளை பெறுவதற்காக முயற்சி செய்ததன் காரணமாக அதிக வாக்குகள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் கட்சி கடந்த காலங்களைப் போல போதிய ஆசனங்களைப் பெற முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

கட்சிக்குள் இருக்கின்ற ஒரு சில முரண்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியிலும் பாரிய பின்னடைவுக்கு காரணமாக இருந்த காரணத்தினால் தான் நாங்கள் கடந்த காலத்தைப்போல பாரிய வெற்றியை அடைய முடியாமல் போய்விட்டது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மை எனவும் தெரிவித்தார்.

அதேபோல இது தொடர்பாக எதிர்காலத்தில் கூடிய கவனம் செலுத்தி இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.