அமெரிக்கா சென்ற முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை கொமாண்டர் காலமானார்

அமெரிக்கா சென்ற முதல் இலங்கையரும், தமிழ் மருத்துவரும் அமெரிக்க விமானப்படையில் நீண்டகாலம் மருத்துவராக கடமையாற்றியவரும், யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனுமான வைத்தியகலாநிதி எஸ் சிவப்பிரகாசம் அவர்கள் தனது 86 ஆவது வயதில் நேற்று 22.08.2020 கொழும்பில் காலமானார். அவரது தகனக் கிரியைகள் இன்று கொழும்பில் இடம்பெறுகின்றது.

2011 இல் எடுக்கப்பட்ட நேர்காணல் இங்கே மீள் பிரசுரமாகிறது.

அமெரிக்காவில் காலடி வைத்த முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை கொமாண்டருடன் ஒரு சந்திப்பு

அமெரிக்கா சென்ற முதல் இலங்கை மருத்துவர் அதுவும் தமிழர் என்ற பெருமைக்குரியவரும் அமெரிக்க விமானப்படையில் 20 வருடங்கள் மருத்துவராக கடமையாற்றிய பெருமைக்குரிய தமிழர் என்ற சிறப்புக்குரியவருமான சாதனைத் தமிழர் திரு டாக்டர் எஸ் சிவப்பிரகாசம் ஐயா (பேபி). விடுமுறையில் இந்தியா வந்திருந்தவரை சென்னையில் சந்தித்தேன்.

அவரை முதன் முதலில் சந்தித்த போது அவரது எளிமையைக் கண்டு உண்மையிலேயே நான் வியந்துவிட்டேன். இத்தனை சிறப்புத் தகுதிகளையும் வைத்துக் கொண்டு அவர் ஒரு எளிமையான மனிதராக எப்போதும் சிரித்த அன்பான முகத்துடன் காணப்படுகிறார். ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் எல்லோருக்கும் சம மரியாதை தருகின்றார். அவர் வாழ்வில் பட்ட அனுபவங்கள் அவரைச் செதுக்கி இப்படியாக ஒரு நிறைகுடம் போல ஆக்கி விட்டது என்று நினைக்கிறேன். நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் முகம் சுளிக்காமல் பொறுமையாக ஆழ்ந்த பதில்களை வழங்கினார். அவரிடம் நேர்காணலைத் தொடங்கினேன்.

கேள்வி : வணக்கம் ஐயா, உங்களது ஆரம்பகாலம், பாடசாலைக் கல்வி, சொந்தமண்ணில் உறவாடிய அந்த நாட்களை சுருக்கமாக கூற முடியுமா?

பதில்: நான் 1933 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி பிறந்தேன். (மகாத்மா காந்தி பிறந்த தினமான ஒக்டோபர் இரண்டாம் திகதியே இவரும் பிறந்தார்.) என்னுடைய அப்பா ஒரு மருத்துவர். சிறு வயதிலேயே எனது தாய், தந்தை இருவரையும் இழந்துவிட்டேன். பின்பு யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலியில் தாத்தாவுடன் (அப்பாவின் அப்பா) வளர்ந்தேன்..பின்னர் அவரும் இறந்துவிட நான் ஆறாவது படிக்கும் போது பெரிய அக்கா திருமணம் முடித்து விட்டார். பின்னர் அவருடன் தங்கி படிப்பைத் தொடர்ந்தேன். திருநெல்வேலி தமிழ் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் நான்காம் வகுப்பிலிருந்து யாழ் இந்துக் கல்லூரியில் சேர்ந்து கொண்டேன். பின்னர் யாழ் இந்துக்கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்து படிப்பைத் தொடர்ந்தேன். அப்போது தான் எனக்கு உதைபந்தாட்டம் மீது தீராக் காதல் ஏற்பட்டது. என்னுடைய உதைபந்து பயிற்சி ஆசிரியராக தியாகர் அவர்கள் இருந்தார். அங்கு பாடசாலை மட்டங்களில் நடந்த ஏராளமான போட்டிகளில் பங்கு பற்றினேன். கடேற் (cadet) பயிற்சியும் பெற்றேன். தியத்தலாவ இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பாடசாலை சார்பாக நடந்த பயிற்சியில் பங்கு பற்றினேன். உதைபந்து விளையாட்டு நான் கல்வியில் முன்னேறுவதற்கு ஒரு காரணமாக இருந்தது என்பது மறுக்க முடியாது.

நான் யாழ் இந்துவில் படித்த காலப்பகுதியில் கல்லூரியின் அதிபராக திரு குமாரசாமி இருந்தார். இவரின் காலத்தில் யாழ் இந்துக் கல்லூரி நிறைய வளர்ச்சிகளைப் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. SSC வரை அதாவது இன்றைய கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை (O /L) வரை யாழ் இந்துக்கல்லூரியிலும் பின்னர் HSC அதாவது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (A/L) படிப்பை மாத்தளையில் தொடர்ந்தேன். அதன் பிற்பாடு இந்தியாவின் பூனேயில் மருத்துவ படிப்பைத் தொடர முடிவு செய்தேன். மங்களூர் மணிப்பால் மருத்துவக் கல்லூரியில் (Mangalore Manipal Medical College) இணைந்தேன். ஐந்து ஆண்டுகால மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தேன். அங்கும் உதைபந்து விளையாடினேன். படிப்பையும் நிறைவு செய்தேன். பின்னர் அமெரிக்கா போக வேண்டும் என்று முடிவு செய்து சென்னையில் விண்ணப்பித்தேன். விண்ணப்பிப்பதற்கு கல்விப் பத்திரங்களை Photocopy எடுத்து அனுப்பச் சொன்னார்கள். அந்த நேரம் Photocopy வசதி எதுவும் இருக்கவில்லை. சென்னையில் உள்ள ஸ்ரூடியோ ஒன்றில் குறித்த கல்விப் பத்திரங்களை போட்டோ பிடித்து தபாலில் அனுப்பினேன். அதற்கான அனுமதியும் கிடைத்தது. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை கிடைத்தது. உணவு தங்குமிட வசதிகளுடன் 99 டொலர்களைத் தான் எனது முதல் சம்பளமாக பெற்றேன்.

கேள்வி : தமிழ் மருத்துவர்கள் லண்டன் போன்ற நாடுகளுக்கு போக முண்டியடித்த நேரத்தில் நீங்கள் அமெரிக்கா செல்ல முடிவு செய்ததன் பின்னணி? அங்கு போவதற்கு பட்ட சிரமங்களையும் எடுத்துச் சொல்லுங்கள்?

பதில் : கொழும்பு சென்று அமெரிக்கா செல்வதற்கு பாஸ்போர்ட், விசா எடுப்பதே பெரும் பாடாக இருந்தது. அங்குள்ள மனிதாபிமானம் மிக்க அலுவலர்கள் மூலம் இரண்டு விடயங்களும் சாத்தியமானது. இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அமெரிக்காவுக்கான விசாவை வழங்கி பாராட்டி நீங்கள் தான் அமெரிக்கா செல்லும் முதல் இலங்கை மருத்துவர் என்று கூறினார். நல்ல சந்தோசமான தருணமாக அது அமைந்தது. அடுத்தும் ஒரு பிரச்சினை.. விமானக் கட்டணம் செலுத்த பணம் இருக்கவில்லை. அதற்கும் அங்குள்ள மனிதாபிமானம் மிக்க அதிகாரி ஒருவர் சொன்னார் Fly now and pay Later என்று அதாவது முதலில் அமெரிக்காவுக்கு செல்லுங்கள் பின்னர் அங்கு உழைத்து மாதாமாதம் விமானக் கட்டணத்தைச் செலுத்துங்கள் என்று கூறினார். அந்த நேரம் அமெரிக்காவுக்கான விமானக் கட்டணம் மிகக் குறைந்த ரூபாய்களாகவே இருந்தது. விமானத்தின் பெயர் BOAC (British Overseas Airways Corporation) என்று அழைக்கப்படும். இலங்கையிலிருந்து லண்டன் சென்று அங்கிருந்து அமெரிக்கா சென்றேன். விமானத்தில் அந்த நேரம் உண்ணுவதற்கு தரப்பட்ட பக்கெட் உணவுகளைக் கூட எதற்காக இவையெல்லாம் தருகிறார்கள்? இவற்றை என்ன செய்ய வேண்டும் என்ற தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. இப்படியாக அல்லல்பட்டு ஒருவாறாக அமெரிக்கா போய் சேர்ந்தேன். அந்த நேரம் இலங்கை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஒரு விமானம் வந்து தரையிறங்கினால் புழுதிபறக்கும் அளவுக்கு சுற்றுப்புறம் இருக்கும். பெரிதாக அபிவிருத்தி அடையவில்லை.

கேள்வி : நீங்கள் பார்த்த அமெரிக்கா எப்படி இருந்தது?

பதில் : 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா போய் இறங்கி விமானநிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. முதலில் விமானநிலையத்தில் போய் இறங்கி குறித்த மருத்துவமனைக்கு போவதில் ஒரு பெண்மணியும், டாக்சி ஓட்டுனரும் பாதை காட்டுகிறேன் என்று ஏமாற்றி விட்டார்கள். இருந்தும் நான் குறித்த இடத்தைச் சென்று அடைந்து விட்டேன். மருத்துவமனைக்கு போய் அங்கு மருத்துவராக இணைந்து கொண்டேன். அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள Jersey city என்ற இடத்தில் உள்ள Chirst hospital இல் தான் நான் முதன் முதலில் மருத்துவராகப் பணியாற்றினேன்.

கேள்வி : அமெரிக்காவில் மருத்துவராக வேலை பார்த்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

பதில்: 1961 ஆம் ஆண்டு டிசம்பர் ஆரம்பத்தில் மருத்துவராக சேவையை அமெரிக்காவில் தொடங்கினேன். அங்கு இந்திய மருத்துவ சிகிச்சை முறைகளுக்கும், அமெரிக்க மருத்துவ சிகிச்சை முறைகளுக்கும் பாரிய வேறுபாடு காணப்பட்டது. அங்கிருந்த தாதியர்கள் மற்றும் அனுபவமான மருத்துவர்களின் உதவியினால் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். உதாரணமாக நம்மூர் மருத்துவமனைகளில் நோயாளிக்கு சிறுநீர் போவதற்கான குழாய் பொருத்துவதாக இருந்தால் ஓடலி என்று அழைக்கப்படும் மருத்துவப் பணியாளர் பொருத்துவார். ஆனால் அமெரிக்காவில் அந்த வேலையை மருத்துவர் தான் செய்ய வேண்டும். ஒருவாறாக ஒரு வருடம் கஷ்டப்பட்டு இன்டர்ன்ஷிப் ஐ முடித்தேன். அதன் பின்னர் மேலதிக நேரம் வேலை செய்து நன்றாக உழைத்து 300 டொலரில் எனது முதலாவது காரை வாங்கினேன்.

கேள்வி : அமெரிக்காவில் உங்களது தனிப்பட்ட அனுபவங்கள்?

அங்கு அந்த நேரம் நிறவெறி கோரத் தாண்டவமாடிய காலம். கறுப்பு, வெள்ளை என்ற பாகுபாடு எங்கும் எதிலும் எதிரொலித்தது. கறுப்பர்கள் , வெள்ளையர்களுக்கு எல்லா இடங்களிலும் தனித் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. மலசலகூடத்திலிருந்து, ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள் என்று எல்லா இடங்களிலும் தனித் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் என்னை கறுப்பர்களும் சரி, வெள்ளையர்களும் சரி அவர்கள் தங்களுக்கு சமமாக மதித்தார்கள். ஏனென்றால் காந்தி தேசத்துக்கு பக்கத்தில் இருந்து வருகின்றபடியாலும், காந்தி மீது அவர்கள் வைத்திருக்கின்ற தார்மீக மதிப்பினாலும் தான் இது சாத்தியம் ஆனது.

கேள்வி : அமெரிக்க இராணுவத்தில் மருத்துவராக பணியாற்றிய அனுபவங்கள்?

பதில் : அமெரிக்காவிலிருந்து லண்டன் சென்று அங்கும் இரண்டு வருடங்கள் மருத்துவராகப் பணியாற்றினேன். பின்னர் இலங்கை சென்று திருமணம் முடித்துவிட்டு மீண்டும் மனைவியோடு அமெரிக்கா திரும்பினேன். அங்கு கிறீன் கார்ட் (Green Card) எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை எனக்கும் மனைவிக்கும் கிடைத்தது. முதலில் அமெரிக்காவின் சிக்காக்கோவில் மருத்துவராகப் பணியாற்றினேன். அங்கு ஒரு சிக்கலான விடயம் என்னவென்றால் மருத்துவ அனுமதிப்பத்திரம் (Medical Licence ) ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்லும் போது மாற்ற வேண்டும். தற்போது போல எல்லா முழு அமெரிக்காவுக்கும் சேர்த்து ஒரே மருத்துவ அனுமதிப்பத்திரம் கிடையாது. அந்த நேரம் வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த காலம். வியட்நாம் போரில் அமெரிக்கப் படைகளுக்கு மருத்துவராகப் பணியாற்ற எல்லா மருத்துவர்களும் வியட்நாமுக்கு செல்ல வேண்டும். எனக்கும் செல்ல அழைப்பு வந்தது. ஆனால் நான் பணியாற்றிய மருத்துவமனை கேட்டுக் கொண்டதற்கு இணங்க கடைசி நேரம் வியட்நாம் செல்வது தவிர்க்கப்பட்டது. வியட்நாம் போரின் இறுதிக் காலப் பகுதியில் நான் அமெரிக்க விமானப் படையில் 1974 ஆம் ஆண்டு மருத்துவராக இணைந்தேன். அங்கு எனக்கு விமானப் படையினருக்கு உரிய அடிப்படைப் பயிற்சிகள் தந்தார்கள். நான் இலங்கைக்கு பக்கத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் பணியாற்ற விரும்பினேன். அதனால் என்னை தாய்லாந்துக்கு அனுப்பினார்கள். அங்கு ஒரு வருடம் மருத்துவ சேவை செய்தேன். பின்னர் ஜப்பானில் ஆறு வருடங்களும், அதன் பிறகு ஒரு வருடம் கொரியாவில் வேலை செய்தேன். பின்னர் ஒன்றரை வருடங்கள் துருக்கியில் பணியாற்றினேன். அதன் பின்னர் மூன்று வருடங்கள் லண்டனிலும் பணியாற்றினேன். அங்கு மருத்துவச் சேவையில் பல்வேறு தராதரங்களில் பணியாற்றினேன்.

கேள்வி : நீங்கள் அமெரிக்க விமானப்படை மருத்துவராக பணியாற்றிய காலத்தில் பெருமையாக நினைப்பதும், திருப்தி கொள்ளும் விடயங்களும் எவை?

பதில் : நான் பல்வேறு நாடுகளிலும் மருத்துவராகப் பணியாற்றிய போது அந்த அந்த நாடுகளுக்கு சுற்றுலா பயணிகளாக வரும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு ஏதாவது மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் நானே நேரடியாகச் செய்தும் இருக்கிறேன். அவர்களுக்கு தீவிர மருத்துவக் கோளாறு என்றால் அமெரிக்க ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி சகல மருத்துவ வசதிகளும் உள்ள அமெரிக்க விமானப் படை விமானத்தில் (Evacuation Air Plane) மூலம் அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இப்படி மனிதாபிமான அடிப்படையில் பலரது உயிர்களையும் காப்பாற்றி உள்ளேன். அமெரிக்காவின் வேர்னியாவில் கடைசி ஐந்து வருடங்கள் கொமாண்டராக பணியாற்றினேன். ஒரு முழு மருத்துவமனைக்கும் நானே பொறுப்பாக இருந்தேன். நேரம் தவறாமையை வலுவாக கடைப்பிடித்தேன். 1974 – 1994 வரை அமெரிக்க விமானப் படையில் மருத்துவராகப் பணியாற்றினேன். அதன் பிறகு 1994 – 1998 இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று Cilvil Services இல் அரச மருத்துவமனையில் பணியாற்றினேன். இராணுவத்தில் இணைய முன்னரும் நான் அரச துறையில் மருத்துவராக இருந்தமையால். எனக்கு இரண்டு ஓய்வு கிடைத்தது.

கேள்வி : நீங்கள் தன்னலம் கருதாத மருத்துவச் சேவையின் மூலம் பெற்ற விருதுகள் பற்றி கூற முடியுமா?

பதில் : அமெரிக்க விமானப்படையில் சிறப்பாக மருத்துவராகப் பணியாற்றியமைக்காக அமெரிக்க ஜனாதிபதியால் வழங்கப்படும் உயரிய விருதான Us President Award for Meritorious Service விருது கிடைத்தது. வியட்நாம் யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் தாய்லாந்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து வியட்நாமில் காயமடைந்த போர் வீரர்களுக்காக சேவை செய்ததற்காக Vietnam Veteran என்ற கௌரவமும் கிடைத்தது. லண்டனில் மருத்துவப் பணியாற்றிய காலத்தில் Member Royal Society of Health என்ற சான்றிதழும் கிடைத்தது. இதெல்லாம் தாண்டி லண்டன், கனடா, இலங்கை, அமெரிக்கா (வாஷிங்டன், வேர்யினியா, டெல்வயர், நியூயோர்க்) போன்ற இடங்களில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான மருத்துவ அனுமதிப்பத்திரம் வைத்திருக்கிறேன். இவற்றை எல்லாம் நான் எனக்கு கிடைத்த கௌரவமாக, பெருமையாக கருதுகிறேன்.

கேள்வி : இவ்வளவு அனுபவங்களைப் பெற்ற நீங்கள் இளைய தலைமுறையினருக்கு கூற விரும்புவது என்ன?

பதில் : நீங்கள் மலை ஏற வேணும் என்று நினைத்தால் மலை ஏறலாம். மற்றவர்களுக்கு உதவியும் செய்யலாம். உலகத்தில் ஒருவருக்கு உதவி செய்ய வேணும் என்றால் நீங்கள் நல்ல உயரத்துக்கு வர வேண்டும். உனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். நீங்கள் நன்றாக படித்து முன்னேற வேணும். நேர்மை எப்போதும் இருக்க வேணும். நேரம் தவறாமை எபோதும் அதை விட முக்கியம்.

கடல் அளவு அனுபவம் மிக்க ஒருவருடன் உறவாடியதை எண்ணி பெருமிதத்துடன் அங்கிருந்து வெளியேறினேன். இவ்வளவு பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு எளிமையாக எல்லோருடனும் பழகும் ஆச்சரியமாகவே அவரை நான் என்றும் பார்க்கிறேன். திரு சிவப்பிரகாசம் ஐயா நான் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு மனிதராகி விட்டார்.

நேர்காணல்: செ.கிரிசாந்-