September 13, 2024

களமிறங்கினார் சாம்?

திருகோணமலை சாம்பல்தீவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட 300 ஏக்கர் பகுதிக்குள் அடங்கியுள்ள தனியார் காணி உரிமையாளர்களிற்கு  நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென இரா.சம்பந்தன் கோரியுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்  மாவட்ட செயலரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இன்று மதியம் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது..

சாம்பல்த்தீவுக் களப்புப் பகுதியில் 360 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து வர்த்தமானியிட வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அப்பகுதிக்குள் தமிழ் மக்கள் பலரின் உறுதிக் காணிகளும் அடங்குகின்றன. ஆனாலும் வனஜீவராசிகள் திணைக்களமோ தமது காணிகளிற்குள் எந்த நடவடிக்கையும் செய்யக்கூடாதென்றும், மீறி செயற்பட்டால் கைது செய்யப்படுவார்கள் எனவும் தமிழ் மக்களை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தடையை நீக்கி காணி உரிமையாளர்கள் தாம் விரும்பும் பணிகளை செய்ய ஆவண செய்ய வேண்டும் என இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருப்பதால் அடுத்து வரும்  நாடாளுமன்ற அமர்வுகளிலோ நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலோ இரா.சம்பந்தன் பங்கெடுக்கமாட்டாரென செல்வம் அடைக்கலநாதன் அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்திலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவு மற்றும் கொறடா தெரிவு இடம்பெறுமென கூறப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.