September 13, 2024

பிரபாகரன் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கலாமா?

பிரபாகரன் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கலாமா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாமெனத் தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, புலிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குவது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையுமெனவும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் காணாமல் போயிருந்தால், அவர்களைக் தேடவேண்டிய அவசியம் இல்லை எனத் தான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் தெரிவித்தார்.

முதலில், காணாமல் போதல் என்பதன் வரைவிலக்கணத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமென்றும் கூறிய அமைச்சர், காணாமல் போனவர்கள் என்று கூறுவார்களாக இருந்தால், அவர்களைத் தேட முடியாதென்றே அர்த்தமெனவும் சில வேளைகளில், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என்றும் கூறினார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்களில் அரைவாசிப் பேர், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது என்றும் கூறிய அமைச்சரவையின் பேச்சாளர், “நாட்டில் யுத்தம் ஒன்று நடைபெற்றது என்பதை மறந்துவிடக் கூடாது. இராணுவம், புலிகள் என இரு தரப்பிலிருந்தும் காணாமல் போனவர்கள் இருக்கிறார்கள். இவர்களைத் தேடுவது பெறுமதியான விடயம்தான். ஆனால், காணாமல் போனவர்களைத் தேடுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது“ எனவும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு அல்லது நிவாரணங்களை வழங்குவதென்பது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகும் என்றார்.

“நீங்களை எங்களைக் கொன்றொழியுங்கள்; உங்களது குடும்பத்துக்கு நாங்கள் நட்டஈடு வழங்குகிறோம்” என்று அரசாங்கம் கூறுவதாகவே இது அமையுமென்றும் கூறிய அவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குவது சரியா? எனவும், அமைச்சர் இதன்போது கேள்வி எழுப்பினார்.