September 13, 2024

காணாமல் போனோர் சங்க பெயர் பலகைக்கும்அடி?

அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தில் பெயர் பலகை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு, அதில் “இதேபோன்றுதான் உனக்கும் செய்வோம்” என்று எழுதப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி செல்வராணி தெரிவிக்கையில்,

“தம்பிலுவில் மத்திய சந்தை கட்டடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தின் பெயர் பதாதையை, இனந்தெரியாத நபர்கள், நேற்று இரவு அடித்து உடைத்துள்ளதுடன், அதில் ஒரு துண்டுபிரசுரத்தை ஒட்டிவைத்துவிட்டு சென்றுள்ளனர்

இதேபோன்றுதான் உனக்கும் செய்வோம் என அத்துண்டு பிரசுரத்தில் எழுதப்பட்டு உள்ளது. இது ஒரு அடாவடித்தனம். இன்று தொலைத்துவிட்டு தேடுவது எங்களது உறவுகளை, நாங்கள் எவருக்கும் எதுவும் செய்யவில்லை யாருடனும் எதுவித பிரச்சனைக்கும் செல்லவில்லை

நாங்கள் எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை தெரிய வேண்டும் எனதான் இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தை வைத்து போராடி வருகின்றோம்

இதனை செய்தவர்கள் யார் என எங்களுக்கு தெரியாது. எனினும் அவர்களை விரைவில் கண்டுபிடிப்போம். இதேவேளை இது தொடர்பாக ஐ.நா.சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை ஆணையகம், திருக்கோவில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்திருக்கின்றோம். இந்த செயற்பாட்டையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இம்மாதம் 30ம் திகதி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டமொன்றை நடத்த இருக்கும் நிலையில் இந்த செயற்பாட்டை ஏன் செய்தார்கள் என தெரியவில்லை. இதனை யார் செய்தாலும் எங்களது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலை தெரியும் வரை போராட்டத்தை தொடருவோம்.

இப்போது எங்களது உயிருக்கு யார் உத்தரவாதம். குறித்த செயற்பாடு எங்களுக்கு அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது” – என்றார்.