April 18, 2024

IKO Nakamura : பிரெஞ்சு கிளைக்கான அனுமதி வழங்கலும், கெளரவிப்பு நிகழ்வும்!!


ஜப்பானின் ‚IKO Nakamura Dojo‘ பாடசாலையின் உத்தியோகபூர்வ பிரெஞ்சு கிளையாக பரிசில் உள்ள IKO Nakamura கராத்தே பாடசாலை அறிவிக்கப்பட்டு அதன் சான்றிதழ் அதன் நிர்வாகியான சென்சாய் ராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது

.

கடந்த இரண்டவரை வருடங்களாக IKO Nakamura France பாடசாலை பரிசில் இயங்கி வந்த நிலையில், தற்போது, ஜப்பானில் புகழ்பெற்ற கராதே பாடசாலையான <International Karate Organization Kyokushin Kai Kan Nakamura Dojo> இன் உத்தியோகபூர்வ கிளையாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான உறுதிப்படுத்தல் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி வழங்கல் மற்றும் கெளரவிப்பு நிகழ்வு இன்று பரிசின் Villepinte நகரில் உள்ள IKO Nakamura France பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இதில் இப் பாடசாலையின் நிர்வாக இயக்குனரும் ‚கியோகுஷின் கராத்தே‘ கலை ஆசிரியருமான திரு. புண்ணிமூர்த்தி ராஜ்குமார் அவர்கள் கலந்துகொள்ள, சிறப்பு விருந்தினர்களாக திரு.எரிக் அவர்கள் மற்றும் செவ்ரோன் நகர தமிழ்ச்சோலை பாடசாலையின் நிர்வாகி திரு.அலெக்‌ஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.

அவர்களோடு, IKO Nakamura France மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டனர்.

சிறு அறிமுகத்தோடு இந்நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து, கெளரவ விருந்தினர் திரு. எரிக் அவர்கள் ஆசிரியர் திரு. ராஜ்குமார் அவர்களுக்கு சான்றிதழை வழங்கினார். <International Karate Organization Kyokushin Kai Kan Nakamura Dojo> பாடசாலையின் உத்தியோகபூர்வ கிளையாக உறுதிப்படுத்தப்பட்ட அந்த சான்றிதழை திரு.ராஜ்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

பின்னர், திரு.அலெக்ஸ் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இப்பாடசாலையின் மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் விதமான பல சிறப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.

பின்னர் இந்த வெற்றியை கொண்டாடும் முகமாக கேக் வெட்டப்பட்டது. Sousui Makoto Nakamura இன் புகைப்படம் பதித்த கேக் ஒன்றும், IKO Nakamura France பாடசாலையின் இலட்சிணை மற்றும் பிரெஞ்சு மூவர்ண கொடி பதித்த கேக் ஒன்றும் வெட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மதிய போசன நிகழ்வு இடம்பெற்றதுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.