September 7, 2024

தீர்வு வழங்கும் பொறுப்பிலிருந்து ராஜபக்ச அரசு நழுவவே முடியாது! – அமைச்சர் வாசுதேவ இடித்துரைப்பு

“தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சே அரசு தீர்வு வழங்க வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து அரசு நழுவ முடியாது. அரசு நழுவிச் செல்ல நாமும் விடமாட்டோம்.”

– இவ்வாறு நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன். முரண்பாடற்ற விதத்தில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை அடுத்து புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே, கிடைத்துள்ள அந்தச் சந்தர்ப்பத்தை அரசு துஷ்பிரயோகப்படுத்த நாம் இடமளிக்கமாட்டோம்.

நான் அமைச்சர் என்ற வகையில் அரசின் ஆள் கிடையாது. நான் மக்கள் பிரதிநிதி. தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களும் பொதுத்தேர்தலில் எனக்கு வாக்களித்தார்கள். எனவே, மூவின மக்கள் நலன் தொடர்பான அனைத்து விடயங்களிலும் நான் முக்கிய கவனம் செலுத்துவேன். மூவின மக்களும் இந்த நாட்டில் நிம்மதியாக – சுதந்திரமாக – ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். தமிழ் மக்கள் எமது எதிரிகள் அல்லர். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களின் சகோதரர்கள். அனைவரும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். எமக்குள் வேற்றுமைகள் இருக்கக்கூடாது” – என்றார்.