மீண்டும் புலி வேட்டை?

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியிலுள்ள வீடுகளுக்கு செல்லும் ராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் இன்று அதிகாலை வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீட்டிலிருந்த அனைத்து விவரங்களையும் சேகரித்து அவற்றைப் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர்.

மேலும் நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் முன்னாள் போராளிகளின் விவரங்களை இராணுவத்தினர் சேகரிக்க தொடங்கியுள்ளமை முன்னாள் போராளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீரிமலை பகுதியின் ஜே/226 ,ஜே/225 ஆகிய பிரதேசங்களில் இன்று அதிகாலை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அனைத்து வீடுகளுக்கும் சென்ற இராணுவத்தினர் குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள், அவரது அடையாள அட்டை ஆகியவற்றை பரிசோதித்தனர்.

மேலும் முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என அப்பகுதி மக்கள் வீட்டிற்கு வந்த ராணுவத்தினரிடம் கேட்டபோது அதுபற்றி எதுவும் கூற முடியாது எமக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று அவ்விடத்து மக்களிடம் கூறி உள்ளனர்.