April 17, 2024

9ஆவது பாராளுமன்றத்தின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் ஒரு நல்ல தீர்வுகளை வழங்கியே ஆகவேண்டும் – சம்பந்தன்

9ஆவது பாராளுமன்றத்தின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் ஒரு நல்ல தீர்வுகளை வழங்கியே ஆகவேண்டும் - சம்பந்தன்

“மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கியே ஆகவேண்டும். இனியும் சாக்குப்போக்குச் சொல்லாமல் நிரந்தர அரசியல் தீர்வை அரசு வழங்க வேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து அரசு தப்பவே முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள அரசாங்கம், நேற்றைய தினம் அமைச்சுக்களைப் பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்நிலையில், அரசாங்கத்திற்கு தமிழர்களின் தீர்வு விடையம் தொடர்பில் எடுத்துரைத்துள்ள சம்பந்தன்,

“வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளைத் திட்டமிட்டு சிதறடித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்களை ஆளும் கட்சியினர் குறைத்துள்ளனர். எனினும், நாம் பலம் குறையவில்லை. இனிவரும் காலங்களில் இழந்த ஆசனங்களை நாம் கைப்பற்றியே தீருவோம்.

மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள மஹிந்த அரசை சர்வதேச சமூகம் நன்கு உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கின்றது. கடந்த காலங்களில் செயற்பட்டதைப் போன்று இனியும் அரசு செயற்பட முடியாது.

நல்லாட்சி அரசு மேற்கொண்ட புதிய அரசமைப்புக்கான பணிகள் இடைநடுவில் நிற்கின்றன. அந்தப் பணிகளை இந்த அரசு ஆரம்பிக்க வேண்டும்.

இந்த அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் உள்ளது. எனவே, புதிய அரசமைப்பை நிறைவேற்றுவது சுலபமானது. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் வகையில் புதிய அரசமைப்பு அமைய வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.