März 28, 2024

தேசியப்பட்டியல் பற்றி சம்பந்தமில்லாதவர்களே தீர்மானித்தார்கள்; சசிகலாவே எனது தெரிவு…!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுவே அதிருப்தியளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

மேலும் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேரிக்க இருந்ததாகவும், எனினும் கட்சியினதும் மற்றும் பலரது அறிவுரைகளின்படியே தான் அந்த நியமனத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக- கட்சித் தலைவருக்கு தெரியாமல் எம்.ஏ.சுமந்திரனின் கட்டளையின்படி செயலாளர் கி.துரைராசசிங்கத்தினால் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவரது நியமனம் கட்சியினால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த வர்த்தமானியில் கலையரசனது பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கலையரசனது நியமனத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த முடிவை யார் எடுத்தார்கள் என்பது தான் எமது கேள்வி. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடாமல் இந்த முடிவு சம்மந்தமில்லாதவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

நான் இத் தேசிய பட்டியல் நியமனத்தை பெற்றுக்கொள்ள நினைத்திருக்கவில்லை. எனினும் தமிழரசு கட்சி மட்டத்திலும் எமது புலம்பெயர் கட்சி உறுப்பினர்கள் மட்டத்திலிருந்தும் என்னை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதன் பின்னரே நான் சம்மதித்தேன்.

எனினும் நான் சசிகலா ரவிராஜையே தேசியப்பட்டியலுக்காக பிரேகரிக்க இருந்தேன். கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆயினும் அந்த முடிவை கட்சியுடன் கலந்துரையாடாமல் சம்பந்தமில்லாத தரப்பினர் நடந்துகொண்ட விதமே அதிருப்தியளிக்கிறது.

இதேவேளை தேசியப்பட்டியலில் பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை மீளப் பெறுவதா அல்லது அதனையே அமுல்படுத்துவதா என்பது தொடர்பாக நாம் கட்சி மட்டத்தில் கலந்துரையாடியே தீர்மானிக்க முடியும் என்றார்.