September 13, 2024

கூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே?

கூட்டமைப்பு கடந்த காலத்தில் உரிமை அரசியலை தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இம்முறை தேர்தலில் கணிசமானளவு மக்கள் சிங்கள  கட்சிகளுக்கும் அரசாங்க சார்பு தமிழ் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் நிலைமையை உருவாக்கியிருக்கின்றதென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதே தவறை மீண்டும் செய்து எமது 70 வருட கால போராட்டத்துக்கு சாவு மணி அடித்துவிடாதீர்கள எனவும் அவர் கோரியுள்ளார்.

வடக்கு- கிழக்கு ரீதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. தலைவர் தம்பி பிரபாகரனினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு அழிக்கப்படக்கூடாது என்றும் தவறானவர்களை நீக்கி சரியானவர்களை தெரிவு செய்து கூட்டமைப்பு சரிசெய்யப்படவேண்டும் என்றும் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் பொய்த்துள்ளன..

இன்று சரியானவர்கள் வெளியேற்றப்பட்டு தவறானவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரு பாரதூரமான நிலைமையினை உருவாக்கி இருக்கின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னர், ஆசனங்களுக்காக இடம்பெற்றுள்ள சில அசிங்கமான செயற்பாடுகள் கூட்டமைப்பின் எதிர்காலப் பாதையை கட்டியம் கூறி நிற்கின்றன எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றிரவு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கூட்டணியின் உருவாக்கம், பங்காளி கட்சிகளின் அர்ப்பணிப்பு, எமக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமை ஆகியவை இல்லாமல் எனது இந்த வெற்றி சாத்தியம் ஆகியிருக்காது. நாம் தொடர்ந்து கூட்டணியாகச் செயற்படவே எண்ணியுள்ளோம். இந்தக் கூட்டணியை மேலும் பலப்படுத்தி தமிழ் மக்களுக்கான நேர்மையான, ஊழல் அற்ற, தமிழ் தேசியத்தின் அடிப்படையிலான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவோம்.

யாழ்ப்பாணத்தில் குறைந்தது நான்கு ஆசனங்களை நாம் எதிர்பார்த்தோம். அதேபோல, வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறைந்தது மூன்று ஆசனங்களை நாம் எதிர்பார்த்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து வருகின்றோம். ஒரு காரணம் எம் மக்களின் ஏழ்மையும் ஏமாற்றப் படக் கூடிய மனோ நிலையுமாகும். மற்றவற்றை அடையாளம் காண்போம். ஆனால், 6 மாதங்களுக்குள் உருவாக்கப்பட்ட கூட்டணி என்ற வகையிலும், அதனுள் கொரோனாக் காலம் உள்நுழைந்தது என்ற வகையிலும் கட்சிகள் அல்லது கூட்டணிக்குரிய மக்கள் கட்டமைப்புக்கள் உருவாக்கப்படாத நிலையிலும் நாம் பெற்றிருக்கும் வெற்றி மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றது. எமது கொள்கைகள் மற்றும் அவற்றை அடைவதற்காக நாம் முன்வைத்த அணுகுமுறைகளை எமது மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆணை வழங்கியிருக்கின்றார்கள். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இவற்றை அடைவதற்கு நாம் பாடுபடுவோம்.

தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது நான் முன்வைத்த அதே குற்றச்சாட்டை நான் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நீங்கள் கடந்த காலத்தில் உரிமை அரசியலை தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இம்முறை தேர்தலில் கணிசமானளவு மக்கள் சிங்கள  கட்சிகளுக்கும் அரசாங்க சார்பு தமிழ் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் நிலைமையை உருவாக்கியிருக்கின்றது. இதே தவறை மீண்டும் செய்து எமது 70 வருட கால போராட்டத்துக்கு சாவு மணி அடித்துவிடாதீர்கள்.

எது எவ்வாறாக இருந்தபோதிலும், தெரிவுசெய்யப்பட்டுள்ள எல்லா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், இந்த நாட்டில் எமது மக்களின் இருப்பு, அடையாளம் ஆகியவற்றை அழிவில் இருந்து மீட்கும் வகையில் மிகவும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டிய ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கின்றோம். முன்னெப்போதும் இல்லாத வகையில், சிங்கள பௌத்த பேரினவாதம் பாராளுமன்றத்துக்குள் அசுர பலத்துடன் புகுந்துள்ளது. பெருமளவில் எமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படும் ஆபத்தும் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியான இனப்படுகொலைகளும் தீவிரப்படுத்தப்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளன. இந்த அச்சுறுத்தலை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து முறியடிக்கவேண்டும். எமக்கு இடையேயான பொது உபாயங்கள் அவசியம். ஒன்றுபட்ட செயற்பாடுகள் அவசியம்.

எமது மக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். பௌத்த சிங்கள பேரினவாதத்தின் எழுச்சியும் திரட்சியும், நாம் அவர்களுக்கு அஞ்சி ஒடுங்கி எமது சுய நிர்ணய உரிமைகளைப் பேசக்கூடாது என்றோ விட்டுக்கொடுக்க வேண்டும் என்றோ ஆகிவிடக் கூடாது. சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணைகளை நாம்  வலியுறுத்தமுடியாது என்று ஆகிவிடக் கூடாது. நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காகவோ நாம் போராட முடியாது என்று ஆகிவிடக் கூடாது. வடக்கு – கிழக்கு இணைப்பை நாம் வலியுறுத்தக் கூடாது என்று கூட ஆகிவிடக் கூடாது.

எமது இனத்தின் நன்மை கருதி தெரிவுசெய்யப்பட்டுள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றது.  இதற்கு நானும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருக்கின்றோம் எனவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.