April 19, 2024

மட்டக்களப்பு வாக்களிப்பு நிலவரம்

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களிப்புகள் இன்று(05) மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 428 வாக்குச் சாவடிகளிலும் ஆரம்பிக்கப்பட்டு சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து, சமுக இடைவெளிகளைப் பேணி வாக்களிப்பதில் ஆர்வங்காட்டுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
வாக்களிப்பு நிலையங்களிலும் இச்சுகாதார வழிமுறை முழுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
சுகாதார திணைக்களத்தினர் கோவிட் 19 சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வாக்களிகும் நடைமுறயினை உறுதி செய்துவருகின்றனர். பொலிஸ் பிரிவினர் சுமுகமான வாக்களிப்பு இடம்பெறுவதற்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதையும், விசேட நடமாடும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாக ஊள்ளது.
இம்மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரைத் தெரிவு செய்வதற்காக 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கல்குடாத் தேர்தல் தொகுதியில் 119 வாக்களிப்பு நிலையங்களிலும், மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் 193 வாக்களிப்பு நிலையங்களிலும், பட்டிருப்புத் தொகுதியில் 116 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
மட்டக்களப்புத் தொகுதியில் மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையமே மிகக்குறைந்த வாக்காளர்களைக் கொண்ட வாக்களிப்பு நிலையமென்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று முடிந்த  பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா புதன்கிழமை மாலை (5) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

கல்குடா தேர்தல் தொகுதியில் 76 வீதமும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 78வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 73 வீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரையும் கல்குடாவில் 89210 வாக்குகளும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 144864 வாக்குகளும், பட்டிருப்பில் 68263 வாக்குகளுமாக 302328 வாக்குகளை மக்கள் பதிவு செய்திருந்தார்கள்.

கல்குடாவில் 28301 வாக்குகளும், மட்டக்களப்பு தொகுதியில் 40603 வாக்குகளும், பட்டிருப்பில் 25761 வாக்குகளுமாக மொத்தமாக 94665 வாக்குகளை மக்கள் அளிக்கப்படவில்லை. நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பில் எதுவித அசம்பாவிதங்களோ அல்லது வன்முறைகளோ பதிவு செய்யப்படவில்லை. 105 சாதாரண முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டது.