April 17, 2024

திருமலை மக்களே! சிந்தியுங்கள்!

தேசியத் தலைவரையும் மற்றும் மாவீரர்களையும் உணர்வுபூர்வமாக நேசிக்கும், களத்திலும் மற்றும் புலத்திலும் வாழும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளிற்கும், செயற்பாட்டாளர்களிற்கும் மற்றும் மக்களிற்கும், எனது தாழ்மையான வேண்டுகோள் !

எம் தேசியத் தலைவனின் வழிநடத்தலில், எம் இனத்தின் விடுதலையை சிங்களத்திடமிருந்து பெறுவதற்கு, 30 வருட ஆயுதப் போராட்டத்தில், நாம் இழந்த சில லட்சம் மக்களையும் மற்றும் பல ஆயிரம் மாவீரர்களையும் ஒரு நிமிடமாவது, தற்பொழுது உயிரோடிருக்கும் எம்மவர்கள், நினைத்துப் பார்க்க வேண்டும் !
முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு, தேசியத் தலைவர் மவுனித்த ஆயுதப் போராட்டம், எதிர்காலத்தில் புலத்திலும் களத்திலும்  உள்ளவர்களும் சேர்ந்து அரசியல் போராட்டமாக மாற்றி, எம் இனத்தின் விடிவை பெற வேண்டுமென்பது, அவருடைய விருப்பமாக 2008 மாவீரர் உரையில் வெளிப்பட்டது !
ஆனால், விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட „தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA)“, இறுதி யுத்த நேரத்தில் தேசியத் தலைவருக்கே „அல்வா“ கொடுத்து விட்டு, தொலைத் தொடர்புகளை துண்டித்து விட்டு, மற்றைய நாடுகளில் உல்லாசமாக இருந்த வரலாற்றை யாரும் மறக்க முடியாது !
முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு இருக்கும் TNAயா, எம் தேசியத் தலைவன் கண்ட கனவை நிறைவேற்றப் போகின்றார்கள் !
அல்லது இவர்களா(TNA), முன்னாள் போராளிகளினதும், அங்கவீனமடைந்த போராளிகளினதும், மாவீரர் குடும்பங்களினதும் மற்றும் அரசியல் கைதிகளினதும், எதிர்கால வாழ்வாதாரத்திற்காக குரல் கொடுக்கப் போகின்றார்கள் ?
கடந்த 11 வருடத்தில், TNA அரசியல்வாதிகள் மக்களின் தீர்வையே அல்லது அபிவிருத்தியையோ அல்லது வாழ்வாதாரங்களைப் பற்றியோ எதுவும் செய்யாது, தாங்கள் மட்டும் மாதம் மாதம் மக்களின் வரிப்பணத்தில், இலங்கை அரசிடம் சம்பளமும் பெற்று  மற்றும் பல அரச சலுகைகளையுமெடுத்து, புலத்திற்கு ஏதோ அரசியல் விடையமாக செல்கின்றோமென்று மக்களிடமும் மற்றும் ஊடகங்களிற்கும் பல பொய்களை சொல்லி விட்டு, தங்களின் குடும்பங்களோடு சுற்றுலா சென்றது தான், இவர்களின் கடந்த கால செயற்பாடுகள் !
எம் மக்களினதும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளினதும் மாவீரர் குடும்பங்களினதும் குரலாக, அரசியல் அனுபவமும் வாய்ந்த மூத்த முன்னாள் போராளியால் மட்டுமே பிரதி பலிக்க முடியும் !
இத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் மீன் சின்னத்தில் போட்டியிடும், அரசியல் அனுபவமுள்ளவரும் மற்றும் தேசியத் தலைவரின் உடன் பிறவா சக போராளியுமான „ஆத்மலிங்கம் இரவீந்திர(ரூபன்)“ அவர்களை, திருமலை மக்களும் மற்றும் முன்னாள் போராளிகளும் சேர்ந்து வெற்றி பெற வைத்து பாராளுமன்றம் அனுப்பி வைப்பதால், நாம் பெறும் நன்மைகளைப் பற்றி விரிவாக சொல்கின்றேன் !
1) இலங்கை பாராளுமன்றத்தில், விடுதலைப் புலிகளின் அரசியல் அனுபவமுள்ள ஒரு முன்னாள் போராளியின் குரல், மாவீரர்களின் பிரதிபலிப்பாகவும் மக்களின் குரலாகவும் ஓங்கியொலிக்கும். எங்களிற்கு இடம்பெற்ற வடுக்கள் பற்றிய உண்மைச் சம்பவங்கள், சிங்கள மக்கள் மனதிலும் இலகுவாக செல்லும் மற்றும் எங்களின் கடந்தகால போராட்ட நியாயங்களை வெளிப்படுத்தி, அரசியல்ரீதியாக நாமே சிங்கள அரசியல்வாதிகளோடு நேரடியாக அழுத்தங்களை கொடுத்து, குறைந்தபட்சம் 50 வருடம் பின்னோக்கியிருக்கும், எம் தமிழர்களின் நிலமான வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளை முதலில் செய்ய முடியும் !
2) ரூபன் அவர்கள் வெற்றி பெற்றால், கண்டிப்பாக மேற்குலக நாடுகளும் மற்றும் இந்தியாவும் அவரை தங்களின் நாடுகளிற்கு வரவழைத்து, அரசியல் தீர்வு விடையங்களைப் பற்றி பேச வாய்ப்புள்ளது !
3) ஜெனீவா மனிதவுரிமை அமைப்பில், கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்ட வாழ்க்கைகளையும் மற்றும் இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற வடுக்களையும் மற்றும் புனர்வாழ்விற்குப் பிறகு அனுபவிக்கும் அழுத்தங்களையும், வெளிப்படையாக ஆதாரப்பூர்வமாக அவரால் பதிவு செய்ய முடியும் !
4) முன்னாள் போராளிகளினதும், அங்கவீனமடைந்த போராளிகளினதும், மாவீரர் குடும்பங்களினதும் மற்றும் அரசியல் கைதிகளினதும் வாழ்வாதார விடையமாக, மேற்குலக நாடுகளின் அரச உதவிகளை இலகுவாக பெற்றுக் கொடுக்க முடியும் !
5) ரூபன் அவர்களின் வெற்றியால், களத்திலும் மற்றும் புலத்திலும் உள்ள பல முன்னாள் போராளிகள், எதிர்காலத்தில் மக்களிற்காக நேர்மையான அரசியல் செய்ய மத்தியிலோ அல்லது மாகாணசபைகளிலோ அல்லது நகரசபைகளிலோ வர, உந்து சக்தியாக அமையும் !
6) ரூபன் அவர்கள் வெற்றி பெற்றால், உலக நாடுகளில் விடுதலைப் புலிகளின் மேல் போடப் பட்டிருக்கும் தடையை இலகுவாக அகற்ற முடியும். ஏன் எனில், விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவரை, இலங்கை அரசே ஜனநாயகரீதியில் அரசியலில் போட்டியிட அனுமதி கொடுத்திருக்கும் பட்சத்தில், எதற்காக இன்றுவரை விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் தடையை போட்டிருக்கின்றீர்களென்று, அவரே அந்த அந்த நாட்டின் அரச மட்டத்திற்கு கோரிக்கை வைத்து, தடையை அகற்றவும் முடியும். அதே நேரம், புலத்தில் தடை போட்டிருக்கும் நாடுகளில் வாழும் எம்மவர்கள் இலகுவாக அந்த நாட்டின், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் போட்டு, விரைவாக தடையை அகற்ற முடியும் !
*** இவ்வளவும் விரைவாக இடம்பெற வேண்டுமாயின், ரூபன் அவர்களை வெற்றி பெற வைக்க உங்களால் செய்யக் கூடிய ஆதரவை எல்லாவகையிலும் கொடுங்கள் !
** ரூபன் அவர்களின் வெற்றி, விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் வெற்றியாக அமைய வேண்டுமென்று, எம் கடவுள்களான மாவீரர்களை பிரார்த்திக்கின்றேன் !
மக்களின் நண்பன்,
பராசுரன் (கனடா)