September 13, 2024

ஈபிடிபியினர் கோடீஸ்வரர்கள்: உறுப்பினர்கள் பிச்சையெடுக்கின்றனர்?

ஈபிடிபி அமைப்பிடம் தற்போது கூட ஆயுதங்கள் உள்ளன.அதனை நான் அவர்களது ஆயுதக்கிடங்குகளில் அடையாளம் காண்பிக்க தயாரான உள்ளேன்.
இந்தியாவிலிருந்து வெறும் சொப்பிங் பையுடன் வருகை தந்த ஈபிடிபி தலைவர்கள் இப்போது கோடீஸ்வரர்களாக உலவுகின்றனர்.ஆனால் அவர்களை நம்பி மக்களை கொலை செய்த உறுப்பினர்கள் கூலி வேலை செய்தும் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சுப்பையா பொன்னையா.
ஈபிடிபி அமைப்பின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரான அவர் இன்று யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் ஒரு பகுதியாக துணைப்படையாகவே ஈபிடிபி அமைப்பு செயற்பட்டது.மாதாந்தம்;  பாதுகாப்பு அமைச்சிலிருந்து ஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் பணம் வழங்கப்பட்டுவந்தது.
ஓவ்வொரு ஈபிடிபி உறுப்பினரையும் துணை இராணுவமாக கருதி மாதாந்த ஊதியம் 1990ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் உறுப்பினரான எமக்கோ 50 ரூபாவும் கடைசியாக பத்தாயிரமும் வழங்கப்பட்டது.
ஆனால் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.
புங்குடுதீவில் கொல்லப்பட்ட ஈபிடிபி உறுப்பினர்கள் ஒன்பது பேருக்குமாக அவர்களது குடும்பங்களிற்கு வழங்கப்பட்ட இழப்பீடு கூட சுருட்டிக்கொள்ளப்பட்டது.
தற்போது தம்மை வெள்ளையாக காண்பித்துக்கொண்டுள்ள சந்திரகுமார்,தவராசா போன்றவர்கள் எம்மை போன்றவர்களை அழைத்து சென்று மீன்பிடி வள்ளங்கள்,இயந்திரங்களை எங்கள் பேரில் வாங்கி அதனையும் சுருட்டிக்கொண்டுள்ளனர்.
தினமுரசு ஆசிரியர் அற்புதன் கொலை முதல் உதயன் பேப்பர் மீதான கொலை வரை அனைத்தையும் ஈபிடிபியே செய்தது.
அனைத்து வெள்ளை வான் கடத்தல் முதல் அனைத்தையும் இவர்களே செய்து விட்டு புலிகள் மீது பொய் பழிகளை போட்டனர்.
1990ம் ஆண்டு யாழ்ப்பாணம் தீகவத்திற்கு வருகை 24 ஈபிடிபி உறுப்பினர்களுள் நானும் ஒருவன்.
ஆனால் இப்போது டக்ளஸ் தேவானந்தாவோ என்னை ஈபிடிபி உறுப்பினரல்ல.டெலோவை சேர்ந்தவரென பொய் சொல்கிறார்.
பல கொலைகளையும் கொள்ளைகளையும் செய்த நெப்போலியன் தற்போது கனடாவில் கோடீஸ்வரனாக இருக்கிறான்.
ஆனால் நாங்களோ வீதியில் கூலியாளாக பிச்சைக்காரனாக இருக்கின்றோம்.
எனது மகனிற்கு மருத்துவ தேவைக்கு கூட காசில்லாமல் வாழ்கிறேன்.
ஏனக்கு டக்ளஸ் -தவராசாவிற்கிடையிலுள்ள வீட்டு பிரச்சினைகள் பற்றி எல்லாம் தேவையில்லை.
ஏனக்கு வழங்கப்படவேண்டிய சம்பள கொடுப்பனவை தந்தாலே போதும்.
கடந்த ஆட்சியில் போராடி எனக்கு ஏதும் நீதி கிடைக்கவில்லை.‘
புதிய ஜனாதிபதி,பிரதமரிடமும் மகஜர்களை கையளித்து காத்திருக்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.