März 29, 2024

ஆயுள் தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்ட முன்னாள் போராளி கண்ணதாஸன் விடுதலையானார்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளர் முன்னாள் போராளி நல்லை கண்ணதாஸ் கொழும்புமேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக இளைஞர் ஒருவரை கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றினால் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டு மனு மீதான விசாரணை இடம்பெற்று வந்திருந்தது.

இந்நிலையில் சற்று முன்னர் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சிகள் இல்லை என்று தெரிவித்து நீதிமன்று அவரை விடுதலை செய்துள்ளது.

3 ஆண்டுகளாக மேல் முறையீட்டு நீதிமன்றில் குறித்த வழக்குத் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுவந்திருந்த நிலையில் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், கண்ணதாஸன் சார்பிலான சட்டத்தரணிகளில் ஒருவராக முன்னிலையாகியிருந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த அவர் மிருதங்கக் கலையின் நுணுக்கங்கள் குறித்த “பஞ்ச நடையில் தனியாவர்த்தனம்” என்ற நூலை சிறையிலிருந்தே எழுதி அதனை அவருடைய குடும்பத்தார் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.