März 29, 2024

யாழிலும் மொட்டு சண்டியன்: மண்டியிட்ட மீன்பிடி அதிகாரிகள்?

யாழ்ப்பாணம் வத்திராயன் பகுதியில் எந்தவிதமான அனுமதியும் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தென்னிலங்கையினை சேர்ந்தவர்களை கைது செய்ய முற்பட்ட போது தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளார் மொட்டு கட்சியின் உள்ளுர் பிரமுகரான டேவிட் நவரட்ணராஜா.

அத்துடன் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முயன்ற மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் துறை அதிகாரியின் கடமையை குறிக்கிட்டு சந்தேக நபர்களை தப்பிக்க செய்தததோடு இது தொடர்பில் முறையிடச் சென்ற அரச அதிகாரிகள் மீதே பொலிசார் விசாரணை மேற்கொண்ட பரிதாபமும் நடந்துள்ளது.
தென்னிலங்கையில் இருந்து வந்து வடமராட்சி வத்திராயன் பகுதியில் இரகசியமான முறையில் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் சுருக்குவலையினைப் பாய்ச்சிய பின்பு டைனமற் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதாக திணைக்களத்திற்கு முறையிடப்பட்டது.
இந்நிலையில் கடற்படையினர் சோதனைக்கு சென்றால் கரையை நெருங்குவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது.
இதனையடுத்து 18ம் திகதி மாலையில் விசேட அதிரடிப்படையினரின் துணையுடன் மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் நடவடுக்கையில் ஈடுபட்டனர்.அச்சமயம் 5 படகுகளில் டைனமற் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட சான்று காணப்பட்ட 3 ஆயிரம் கிலோவிற்கும் மேற்பட்ட மீன்களையும் கைப்பற்றிய திணைக்கள அதிகாரிகள் அவற்றினை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதற்கான வாகன ஏற்பாடுகளை மேற்கொண்டு காத்திருந்த சமயம் மொட்டு கட்சியின் வடக்கு மாகாண இணைப்பாளர் என அறிமுகம் செய்த டேவிட் நவரட்ணராஜா மேலும் சிலருடன் இணைந்து அதிகாரிகளை கடமையை செய்ய விடாது தடுத்ததோடு சந்தேக நபர்களை சான்று பொருட்களுடன் தப்பிச் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளார்.
இதன்போது தடுக்க முற்பட்ட அதிகாரிகளை தாக்க முற்பட்டதனால் அதிகாரிகள் அங்கிருந்து அகன்று சென்றிருந்தனர்.
பொலிசார் சட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதுணகயாக இருப்பதற்குப் பதிலாக குற்றவாளிகளிற்கும் குற்றவாளிகளை தப்பிக்க வைத்தவரிற்கும் உதவுமாறு கோரும் நிலையில் அதிகாரிகள் திண்டாடிவருகின்றனர்.