April 19, 2024

கையை விரித்த மஹிந்த…..

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உதவி இன்றி சுகாதார வழிக்காட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார அமைச்சினுடன் ஏற்படுத்திக் கொண்ட முரண்பாடுகளுக்கு மத்தியில் தேர்தல் நடைபெறுமா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்.

சுகாதாரம் தொடர்பான ஆபத்து காணப்படும் சந்தர்ப்பத்தில் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய செயற்படுவதா இல்லையா என்பதை சுகாதார பரிசோதகர்கள் மூலம் மாத்திரமே ஆராய்ந்து பார்க்க முடியும்.

பொது மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாவதை தடுக்கவே பொதுத் தேர்தல் சம்பந்தமான சுகாதார வழிக்காட்டல்களை வர்த்தமானியில் வெளியிடும் போது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரங்கள் வழங்கவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறியிருந்ததை கண்டித்து, பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த 17 ஆம் திகதி மதியம் 12.30 மணி முதல் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகிக்கொண்டனர்.

இது சம்பந்தமாக சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வரை சாதகமான பதில் எதனையும் வழங்காத காரணத்தினால், இன்று முதல் அனைத்து தொற்று நோய் கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து அவர்கள் விலக தீர்மானித்துள்ளனர் எனவும் இவ்வாறு அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது விடின் வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லையென அவர் தெரிவித்துள்ளார்.