April 23, 2024

இலங்கையில் மூன்று வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது! வெளியான காரணம்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தேர்தல் சட்டவிதிகளை மீறியதாக 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுத் தொடர்பில் 147 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , 44 பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதேவளை அரச வாகனங்கள் 2 உட்பட 60 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவித்து அவரது ஆலோசனைக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேள்வி :குருநாகல் அரச மண்டப உடைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

பதில்: ஆம், இதன்போது குருநாகல் நகரசபை மற்றும் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளில் பிரகாரம் கிடைக்கப்பெறும் தகவல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்து , அவரது ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும்.