März 28, 2024

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Crossroads கேளிக்கை விடுதிக்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழலில், வில்லாவுட் குடியேற்ற தடுப்பு முகாமில் பணியாற்றிய ஊழியர்கள் சுய-தனிமைப்படுத்தலில் இருப்பதாக அகதிகள் நல அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது.

 
இந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக கொரோனா பரவியதாகக் கூறப்படும் கேளிக்கை விடுதிக்கு சென்ற தடுப்பு முகாம் ஊழியர் தனிமைப்படுத்திக்கொண்டதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்துள்ளது. 
 
“அண்மையில், விடுதிக்குச் சென்ற வில்லாவுட் ஊழியர்கள் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அறிவுரையின்படி சுய-தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்,” எல்லைப்படையின் பேச்சாளர் கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். 
 
அதே சமயம்,  எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை ஆஸ்திரேலிய எல்லைப்படை உறுதிச்செய்யவில்லை. முன்னதாக, 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுய-தனிமைப்படுத்தலில் உள்ளதாக அகதிகள் நல அமைப்பான Refugee Action Coalition கூறியிருந்தது. 
 
சிட்னி நகருக்கு அருகே அமைந்துள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்ற 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், ஜூலை 3 மற்றும் ஜூலை 10ம் தேதிகளுக்கு இடையே இவ்விடுதிக்குச் சென்றவர்கள் 14 தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் எனவும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.