April 19, 2024

மீண்டும் எகிறும் கொரோனா?

இலங்கையில் கொரோனா தொற்றின் புதிய மையமாக உருவாகியுள்ள கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த தமது பிள்ளைகளை பார்வையிட யாழ்ப்பாணத்திலிருந்து சென்று வந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் புனர்வாழ்வு நிலைய உத்தியோகத்தர்கள் என இதுவரை 340 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்த நிலையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட சென்று வந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.வடக்கில் மொத்தமாக 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இதன் மூலம் இலங்கையில் மொத்தம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,447 ஆக உயர்ந்துள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து இன்று மேலும் 87 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை கந்தக்காடு முகாமில் இருந்து 340 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு மற்றும் சேனபுர பகுதிகளில் உள்ள இரண்டு போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்களில், புனர்வாழ்வு பெறுபவர்கள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 1150 பேர் உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்படும் சோதனையில் மேலும் தொற்றாளர் எண்ணிக்கை எகிறும் என அஞ்சப்படுகிறது.