April 24, 2024

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதல் நினைவு நாள் இன்று

யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம்  திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் மரணமடைந்தனர்.
அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தொடர் எறிகணைத் தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், அன்று காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.
இந்தக் குண்டுவீச்சு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி மரணித்ததுடன் 350இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் படைகள் மேற்கொண்ட இனப்படுகொலைகளை இந்த உலகில் ஒரு தமிழன் இருக்கும்வரை மறக்கமாட்டான். மறக்க முடியாது. உலகிலுள்ள எந்தவொரு இனத்திற்கும் இழைக்காத கொடுமைகளை சிங்களப் படைகள் தமிழர்களுக்கு இழைத்திருக்கிறார்கள். இந்தக் கொடுகமைகளில் ஒன்றுதான் நவாலிப் படுகொலை.
ஆம், இந்தப் படுகொலையை நினைக்கவே நெஞ்சம் திகைக்கின்றது. ஆன்மா ஆர்ப்பரிக்கிறது. நரம்பெல்லாம் முறுக்கேறுகிறது. இயேசுவிடம் அடைக்கலம் தேடிய அப்பாவி மக்கள் மீது சிங்களப் படைகள் நடத்திய காட்டு மிராண்டித்தனமாக குண்டுவீச்சுத் தாக்குதலில் 147 பொதுமக்கள் துடிதுடித்து மடிந்தனர். சிங்களப் படைகளின் இந்தக் கொடுமை நடைபெற்று 19 வருடங்களாகின்றன. ஆனாலும் அந்த இன அழிப்பின் வடுக்கள் தமிழ் மக்களை விட்டு நீங்காமல் உள்ளன. நினைக்கும்போது நெஞ்சம் வெடிக்கும் அந்தக் கணங்களை எவரால்தான் மறந்துவிட முடியும்.
1995 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 9 ஆம் திகதி பலாலி படைத்தளம், மாதகல், காரைநகர் ஆகிய இடங்களில் நிலைகொண்டிருந்த படையினர் அதிகாலை முதல் கடும் செல் தாக்குதல்களை மேற்கொண்டவாறு முன்னேறத் தொடங்கினர். யாழ்ப்பாணத்தை முற்று முழுதாக கைப்பற்றும் நோக்கத்துடன் ‘முன்னேறிப் பாய்தல்’ என்று பெயர் சூட்டப்பட்டு படையினர் இந்த நடவடிக்கையைத் தொடங்கியிருந்தனர். இவர்களுக்கு ஆதரவாக மாதகல், காரைநகர், பலாலி படைத்தளங்களில் இருந்து கடும் ஆட்லறித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. கடலில் நிலைகொண்டிருந்த கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இவற்றுக்கு மேலாக புக்காரா விமானங்களும் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி குண்டுவீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டன.
அதிகாலை ஐந்து மணிக்கு முன்னரே இந்த தாக்குதல்கள் தொடங்கப்பட்டதால் உறக்கத்திலிருந்த  மக்கள் செய்வதறியாத நிலையில் கையில் கிடைத்த பொருட்களுடன் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமது இடங்களை விட்டு வெளியேறினர். சங்கானை, அளவெட்டி, சங்குவேலி, சண்டிலிப்பாய், மூளாய், பொன்னாலை, சுழிபுரம், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து மக்கள் வயல் வெளிகளுக்கூடாக பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.
குறிப்பாக, நவாலி, சங்குவேலி வயல் வெளிகளுக்கூடாகவே பெருளவான மக்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். இவர்களை நோக்கி சிறீலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகள் கலிபர் தாக்குதல்களை மேற்கொண்டன. இதில் பல பொதுமக்கள் உயிரிழந்தனர். ஆனாலும் மக்கள் ஒடிக்கொண்டிருந்தனர். இவ்வாறு வந்த மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். அதிகாலை முதல் மக்கள் ஓடிக்கொண்டிருந்ததால் அவர்களில் பலர் பசியாலும் தாகத்தாலும் வாடி வதங்கினர். சிறு குழந்தைகள் கதறினர். அனைவரும் இயேசுவை நோக்கி வேண்டுதல் செய்தவாறு அந்த தேவாலயத்தில் தங்கியிருந்தனர். சில தொண்டர்கள் அவர்களுக்கான தாகசாந்திப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் மட்டுமன்றி யுத்தம் முடிவடையும் 2009 ஆம் ஆண்டு வரை சிறீலங்கா படையினர் கோழைத்தனமான யுத்த முறைகளையே கைக்கொண்டு வந்தனர். தாங்கள் இழப்புக்களைச் சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அப்பாவித் தமிழ் மக்களையே பதம் பார்த்தனர். தென்னிலங்கையில் என்றாலும் வடக்கு கிழக்கில் எந்த யுத்த களத்தில் என்றாலும் படையினருக்கு புலிகள் பேரிழப்பை ஏற்படுத்தினால் சிறிலங்கா போர் விமானங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்புக்களுக்கு மேல் குண்டுகளை வீசி மக்களைக் கொலை செய்தன. இது முற்றுமுழுதான யுத்த விதி மீறல் என்பது தெரிந்திருந்தும் சிங்களப் படை தனது பிற்போக்குத்தனத்தை தொடர்ந்தும் கையாண்டது. இதேபோன்ற கோழைத்தனமான தாக்குதல் உத்தியையே நவாலி சென்.பீற்றர் தேவாலயத்தின் மீது சிறீலங்கா வான்படை நிகழ்த்தியது.
‘முன்னேறிப் பாய்தல்’ என்ற இராணுவ நடவடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளால் எதிர்பார்க்கப்படாத ஒரு நடவடிக்கை. வடக்கில் ஏனைய யுத்த களங்களை நோக்கி புலிகளின் பார்வையைத் திசை திருப்பிவிட்டு பலாலியில் நிலைகொண்டுள்ள படையினர் கரையோரம் மற்றும் குடியிருப்புகள் வழியாக முன்னேறினர். இந்தப் படையினர் பண்டத்தரிப்பு, சில்லாலை, சங்கானை, சண்டிலிப்பாய் வழியாக மானிப்பாய், நவாலியை ஊடறுத்து யாழ்.நகர் செல்வது என்றும், மாதகல், காரைநகர் ஆகிய இடங்களில் உள்ள படையினரும் கடற்படையினரும் பொன்னாலை, மூளாய், சுழிபுரம், வட்டுக்கோட்டை, அராலி ஆகிய பகுதிகளூடாக முன்னேறி மற்றைய அணியைச் சந்தித்து இரு அணிகளும் யாழ்.நகர் நோக்கி முன்னேறுவது என்றும் சிறிலங்கா படைத்தரப்பில் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
அதிகாலை ஐந்து மணிக்கு முன்னரே தாக்குதல்கள் ஆரம்பமானதால் முன்னணிக் காவலரண்களில் நின்ற புலிகள் தலைமைத் தளபதிகளுக்கு தகவல்களை அனுப்பினர். உடனடியாக அங்கு விரைந்த புலிகளின் அணிகள் முன்னேறி வந்துகொண்டிருந்த படையினரைத் தடுத்து நிறுத்தி கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தினர். ஆனாலும் படையினர் பொன்னாலை, மூளாய், சுழிபுரம், ஆகிய பகுதிகளை ஊடறுத்து முன்னேறியிருந்தனர். பலாலியிலிருந்து வந்த படையினரும் பண்டத்தரிப்பு, சில்லாலை ஆகிய பகுதிகளூடாக சண்டிலிப்பாய் வரை முன்னேறியிருந்தனர். ஆனால், அங்கு அனுப்பப்பட்ட மேலதிக புலிகள் படையினரைத் தடுத்து நிறுத்தி கடும் சமர் புரிந்தனர். இந்த எதிர்த் தாக்குதல்களால் படையினருக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்னர். இதனால் படையினரின் முன்னேற்ற முயற்சி தடைப்பட்டது. அவர்கள் முன்னேறிய இடங்களில் நின்றவாறே மக்களை நோக்கி தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதல்களில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களின் எதிரொலியாக மூன்று புக்காரா விமானங்களில் சுமந்துகொண்டுவரப்பட்ட 13 வரையான குண்டுகள் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தங்கியிருந்த மக்கள் மீது வீசப்பட்டன. ஒரே தடவையில் 13 குண்டுகள் வீசப்பட்டமையால் நவாலி என்ற அந்த சிறிய பிரதேசம் அதிர்ந்தது. எங்கும் ஒரே புகை மண்டலம். எங்கும் ஒரே மரண ஒலம். அந்த தேவாலயத்திலும் முருகன் ஆலயத்திலும் தங்கியிருந்த மக்களும் வீதியால் சென்றுகொண்டிருந்த மக்களுமாக 147 பேர் சில நிமிடங்களிலேயே துடிதுடித்துப் பலியாகினர். இந்த மக்களுக்கு தாகசாந்தி வழங்கிக்கொண்டிருந்த ஒரு பெண் கிராம சேவையாளரும் ஆண் கிராம சேவையாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பலர் குடும்பம் குடும்பமாகவே மரணித்தனர்.
தேவனிடம் அடைக்கலம் தேடி வந்திருந்தவர்களை அந்தத் தேவனே கைவிட்டார். அப்பாவி மக்கள் கதறிக் கதறி உயிர் விட்டனர். இவர்களின் உடல்கள் குண்டுகளால் சிதைக்கப்பட்டன. அயலில் இருந்த மரங்கள் மீது வீடுகளின் முகடுகள் மீதும் மனிதர்களின் அவயவங்கள் தொங்கின. சதைத் துண்டங்கள் ஆங்காங்கே இறைச்சிக் குவியல்கள் போன்று கிடந்தன. வீதியெங்கும் ஒரே இரத்த வாடை. ஒருசில விநாடிகளில் அந்தப் பிரதேசம் மயானம் போன்று மாற்றமடைந்திருந்தது.
இந்த இழப்புக்களால் தமிழர் தாயகமே சோகத்தில் மூழ்கியது. கொல்லப்பட்ட அத்தனை உடல்களும் தேவாலய வாசலில் அடுக்கப்பட்டிருந்த அந்தக் காட்சி மனித மனங்களை மரக்கச் செய்தது. யுத்த விதிகளைப் பின்பற்றாமல் அப்பாவித் தமிழர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட சிங்களப் படையினரின் செயலை உலகமே கண்டித்தது. ஆனால், அதில் கொல்லப்பட்ட மக்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. அன்றும் ஐ.நா சபை இருந்தது. மனித உரிமை ஆணைக்குழுக்கள் இருந்தன. மனித உரிமை அமைப்புகள் இருந்தன. ஆனால் அவை இன்றிருப்பதைப் போலவே பேச்சளவில் மட்டும் அறிக்கைவிடும் அமைப்புகளாகவே இருந்தன.
இத்தனை தமிழ் மக்களைக் கொன்றொழித்த போதிலும் சிறீலங்கா படையினர் தமது முன்னேறிப் பாய்தல் படை நடவடிக்கையைக் கைவிடவில்லை. தமிழ் மக்களைக் கொன்றொழிக்கும் தங்கள் கொலைவெறித் தாக்குதல்களையும் நிறுத்தவில்லை. தொடர்ந்தும் மக்களின் குடியிருப்புக்களை நோக்கி விமானக் குண்டுவீச்சுக்களும் எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தன. எதிரி தனக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் பொருட்படுத்தாமல் தனது திட்டத்திற்கு ஏற்றவாறு முன்னேற்ற முயற்சியைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.
இந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் தீர்க்கமான நடவடிக்கை எடுத்தார். இத்தனை மக்களையும் கொன்றொழித்த பின்னரும் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்ட படையினருக்கு பாடம் புகட்ட முடிவெடுத்தார். பிற இடங்களிலிருந்து மேலதிக போராளிகள் உடனடியாக வரவழைக்கப்பட்டு களமுனைக்கு அனுப்பப்பட்டனர். ‘முன்னேறிப் பாய்தல்’ என்ற படையினரின் நடவடிக்கையைத் முறியடிப்பதற்கு ‘புலிப்பாய்ச்சல்’ என்ற பெயர் சூட்டப்பட்ட புலிகளின் தாக்குதல் 10 ஆம் திகதி அதிகாலை தொடங்கியது. புலிகளின் புதிய அணியினர் மேற்கொண்ட கடும் தாக்குதல்களை சற்றேனும் எதிர்பார்க்காத படையினர் பெரும் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடத் தொடங்கினர். முன்னேறிப் பாய்தல் என்ற பெயருக்கு மாறாக அவர்கள் பின்னோக்கி  தப்பியோடினர். இந்த எதிர்ச் சமர் புலிகளுக்கு இழப்புக்கள் இல்லாத சமராக வரலாற்றில் பதிவாகியது.
இராணுவம் முன்னேறியிருந்த பிரதேசங்கள் புலிப் போராளிகளுக்கு ஏற்கனவே நன்கு பழக்கப்பட்ட பிரதேசங்களாக இருந்தன. இதனால் சண்டை விறுவிறுப்பாக அமைந்தாகவும் கிராமங்களுக்குள்ளாலும் ஒழுங்கைகளுக்குள்ளாலும் ஊடறுத்துச் சென்று படையினருக்கு எதிராகத் தாக்குதல்கள் மேற்கொண்ட போது படையினர் தப்பியோடுவதைப் பார்த்து தங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருந்ததாகவும் இந்தச் சமரில் பங்கெடுத்த போராளியருவர் தெரிவித்தார்.
இந்தத் எதிர்த் தாக்குதல் சிறீலங்கா படையினருக்கு புதிய பாடமொன்றைக் கற்றுக்கொடுத்தது. தமிழீழத் தாயகத்தில் எந்த இடத்திலும் புலிகள் பலமாக இருக்கின்றார்கள் என்ற உண்மையை அவர்களுக்கு தெரியப்படுத்தியது. இதற்குப் பின்னர் படையினர் யுத்தம் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டுவரை இந்தப் பிரதேசத்தை நோக்கி முன்னேற முயலவில்லை.
சிறீலங்கா அரசாங்கம் எமது மக்களுக்கு இழைத்த கொடுமைகளை எமது இளைய தலைமுறை அறியாமல் இருக்கக்கூடாது. எமது இளைய தலைமுறைக்கு வீரத்தை ஊட்ட வேண்டும். எமது இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின் கடந்த கால நினைவுகளை நாங்கள் மறக்கக்கூடாது. அந்த நினைவுகளை மீட்டும்போது எங்களுக்குள் இயல்பாகவே ஓர்மம் பிறக்கும். விடுதலை உணர்வு தலைதூக்கும். இந்த விடுதலை உணர்வின்மூலமே நாங்கள் எமது இலக்கை அடைய முடியும்.
இந்நிலையில் இந்த நினைவு ஆண்டுதோறும் நினைவு கூரப்பட்டுவரும் நிலையில் இன்று 25ஆவது ஆண்டு நினைவு கூரப்படுகிறது.
இதேவேளை, நவாலி சென்பீற்றர் தேவாலத்தில் நினைவு நாள் அஞ்சலி நிகழ்வை நடத்தும் பொருட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நினைவுகூரல் நிகழ்வு தடையின்றி முன்னெடுக்கப்படும் என எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.