März 29, 2024

சீனாவின் ராஜதந்திரத்தை அம்பலப்படுத்திய கனடா பிரதமர் ஜஸ்ட்டின்ட்ரூடோ!

சீனா பணயக் கைதிகளை பிடித்து வைத்துக் கொண்டு, வேண்டியதை அடைய நினைக்கும் ராஜதந்திரத்தை கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அம்பல்ப்படுத்தியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறியதாகக் கூறி சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

இதையடுத்து, கனடா அரசு மெங் வான்சூவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை விசாரணைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் தான் கனடா நாட்டவர்களான மைக்கேல் கோவ்ரி, மைக்கேல் ஸ்பேவர் ஆகிய இருவர் உளவு பார்த்ததாகக் கூறிச் சீன அரசு அவர்களை கைது செய்தது. இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டுமானால், மெங் வான்சூவை விடுவிக்க வேண்டும் எனச் சீன அரசு கூறியது.

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் இந்தத் திட்டத்தை ஏற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துவிட்டார். குற்றவாளிகளை நாடு கடத்த ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாட்டையும் ரத்து செய்துவிட்டார்.

இதேபோல் ஹாங்காங்குக்கு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை விதித்துவிட்டார். கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் திட்டத்தைக் கனடா பிரதமர் நிராகரித்தது சீனாவின் பணயக் கைதி ராஜதந்திரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

ஒருமுறை விட்டுக்கொடுத்துவிட்டால் சீனா அடுத்த இலக்கைக் குறிவைக்கும் என்பதை அறிந்து கனடா பிரதமர் இவ்வாறு தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.