September 13, 2024

700 இந்தியர்களை ஏற்றிய கப்பல் கொழும்பிலிருந்து புறப்பட்டது; நாளை காலை தூத்துக்குடியை சென்றடையும்!

 

கொரோனா மற்றும் ஊரடங்கால் இலங்கையில் சிக்கிய 700 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு, கொழும்பிலிருந்து இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் மற்றும் ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தாய் நாட்டுக்கு தொடர்ந்து அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதன் ஒரு பகுதியான ‘சமுத்திர சேது’ என்ற திட்டத்தின் கீழ் இலங்கை, மாலைதீவு மற்றும் ஈரானில் சிக்கியுள்ளவர்களை தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐஎன்எஸ் ஜலஸ்வா’ என்ற கப்பல் இந்தியர்களை அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபடுகிறது.

இதில், இலங்கையில் இருந்து தமிழர்கள் உட்பட 700 இந்தியர்களுடன் முதல் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து இன்று கிளம்பியது. பயணிகள் அனைவரும் முழுமையான பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் கப்பலில் ஏற்றப்பட்டனர்.

இந்தக் கப்பல் நாளை (02) காலை 8 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கரித்தளத்தைச் சென்றடையும்.

இதன் தொடர்ச்சியாக மாலைதீவிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் (700 பேர்) எதிர்வரும் 7ஆம் திகதியும், ஈரானிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் (700 பேர்) எதிர்வரும் 22ஆம் திகதியும் தூத்துக்குடியைச் சென்றடைவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.