September 13, 2024

முற்றுகை தாண்டி நடேசன் நினைவேந்தல்!

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். ஊடக அமையத்தில் முற்றுகைக்குள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தலிற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று காலை முதல் ஊடக அமைய சூழல் புலனாய்வு பிரிவினரதும் காவல்துறையினதும் முற்றுகைக்குள்ளாகியிருந்தது.
குறிப்பாக சிவில் உடையிலும் சீருடையிலும் காவல்துறையினர் வாகனங்கள் சகிதம் முற்றுகையிட்டிருந்தனர்.
நினைவேந்தல் ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்றிருந்தது.
படுகொலையான ஊடகவியலாளர்கள்,ஊடகப்பணியாளர்கள் மற்றும் கொரோனாவினால் உலகளாவிய ரீதியில் மரணித்தோரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டுப்பற்றாளர் நடேசனின் திருஉருவப்படத்திற்கு ஊடகவியலாளரான இராமச்சந்திரன் மயூதரன்  ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.
நிகழ்வில் சிறைப்புரையினை மூத்த ஊடகவியலாளரும் நடேசனுடன் இணைந்து பணியாற்றியவருமான இரத்தினம் தயாபரன் ஆற்றியிருந்தார்.
இலங்கை அரசு கொரோனா தடுப்பென்ற பேரில் நினைவேந்தல்களை தடுக்க முற்படுவதை கண்டித்த அவர் படுகொலையான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கு நீதி கோரும் தமது பயணத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார்.
நினைவேந்தல் நடைபெற்றிருக்கொண்டிருந்த போது அமையத்தினுள் உள்ளே புகுந்த பொலிஸாரை நிகழ்வு இடத்திற்கு வருகை தர ஊடகவியலாளர்கள் அனுமதித்திருக்கவில்லை.
நிகழ்வு முடிந்த பின்னரும் அங்கு நீண்ட நேரம் காத்திருந்தவர்கள் மதியத்தின் பின்னரே வெளியேறிருந்தனர்.