September 13, 2024

இந்திய பெருங்கடலுக்கு கீழ் டெக்டோனிக் பிளேட் பிளவு… வரப்போகும் ஆபத்து என்ன?

இந்தியப் பெருங்கடலுக்கு கீழே டெக்டோனிக் பிளேட் இரண்டாக பிளந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் லைவ் சயின்ஸ் ஆய்வும் வெளியாகி இருக்கிறது.

இந்தியப் பெருங்கடலுக்கு கீழே இருக்கும் டெக்டோனிக் பிளேட் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது. ”இந்தியா ஆஸ்திரேலியா கேப்ரிகான்” டெக்டோனிக் பிளேட் என்று அழைக்கப்பட்டும் பிளேட்தான் தற்போது இரண்டாக பிளந்து வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தப் பிளேட் நத்தை வேகத்தில் இரண்டாக பிளந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 0.06 இஞ்ச் அளவிற்கு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்படியே விரிசல் ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளில் இரண்டாக பிளந்து ஒரு மைல் தூரத்திற்கு இரண்டு பாகங்களாக பிரிந்து செல்லும்.

இது வேகமாக நகருகிறது என்று கூற முடியாது என்றாலும், மற்ற கண்டங்களுடன் ஒப்பிடுகையில் வேகமாக பிளந்து வருகிறது என்று கூற முடியும் என்று பாரீஸ் பூமி இயற்பியல் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு கடலில் இருக்கும் டெட் சி பால்ட்டில், ஆண்டு ஒன்றுக்கு 0.2 இஞ்ச் அளவிற்கு விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுவே கலிபோர்னியாவில் இருக்கும் சான் ஆண்டிரியாஸ் பால்ட்டில் 0.7 இஞ்ச் அளவிற்கு விரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்தியப் பெருங்கடலில் 2012ஆம் ஆண்டில், இந்தோனேஷியா கடல் பகுதியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவில் 8.6, 8.2 என்ற அளவில் இருந்தன. இதுவும் பூமியில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்டது போன்று இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்படவில்லை. பிளேட்டுகளின் நடுவில் இருந்து அழுத்தம் ஏற்பட்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்பட்டது.

‘இந்திய ஆஸ்திரேலியா கேப்ரிகான் பிளேட்’ தற்போது பல்வேறு வேகங்களில் நகர்ந்து வருகிறது. முன்பு ஒரு சிறிய பிளவாக இருந்தது, தற்போது பெரிய அளவில் பிளவுபட்டு, புதிய எல்லைகளை இந்த பிளேட்டுகளுக்கு உருவாக்கி வருகின்றன. இந்தப் பகுதியில் அடுத்த 20,000 ஆண்டுகளுக்கு நிலநடுக்கம் இருக்காது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.