April 19, 2024

முன்னாள் ஜனதிபதி மைத்திரி ஆட்சியில் 4 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 400 கோடி ரூபாய் செலவு

முன்னாள் ஜனதிபதி மைத்திரி ஆட்சியில் 4 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 400 கோடி ரூபாய் செலவு

முன்னாள் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் 400 கோடி ரூபாய் செலவிட்டு, விசாரணைகளை நடத்திய நான்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ள போதிலும் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நடத்திச் செல்வதற்காக வாகனங்கள், அவற்றுக்கான எரிபொருள் செலவுகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக நான்கு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அரச கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில ஆணைக்குழுக்கள் பல்வேறு அரச நிறுவனங்களின் தலைவர்களிடம் விசாரணை நடத்தி, ஆவணங்களை பெற்று, சாட்சியங்களை விசாரித்து அனைத்து விசாரணைகளையும் நிறைவு செய்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிக்கையை வழங்கிய போதிலும் அவற்றில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் அந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் செய்ததாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பாக விசாரிக்க 400 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அனைத்து ஜனாதிபதி ஆணைக்குழுக்களும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளை அழைத்தும் சாட்சியங்களை பெற்றுக்கொண்டன.

அரச நிறுவனங்களில் கடந்த நிதி மோசடிகள் சம்பந்தமான சம்பவங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்தன் மூலம் ஏற்பட்டுள்ள நிதி செலவுகளை விசாரிக்க மேலும் ஒரு விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க நேரிட்டுள்ளதாக இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள அரச கணக்காய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.