März 29, 2024

வடகொரியாவில் மூடப்பட்ட பிரித்தானிய தூதரகம்: சீனாவுக்கு சென்ற அதிகாரிகள்

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில் வடகொரியாவில் புதிய சட்டங்களை அமுலுக்கு கொண்டுவந்துள்ளதை அடுத்து அங்குள்ள பிரித்தானிய தூதரகம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவுக்கான பிரித்தானிய தூதர் கொலின் க்ரூக்ஸ், குறித்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பியோங்யாங்கில் உள்ள பிரித்தானிய தூதரகம் தற்காலிகமாக 27 மே 2020 அன்று மூடப்பட்டது. அனைத்து இராஜதந்திர ஊழியர்களும் தற்காலிகமாக வடகொரியாவை விட்டு வெளியேறியுள்ளனர் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வெளியுறவு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில்,

நாட்டிற்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால் தூதரக ஊழியர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்துவது சாத்தியமற்றதாக மாறியுள்ளது என்றார்.

இது இவ்வாறிருக்க, வடகொரியா தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்றே இதுவரை கூறி வருகிறது.

ஆனால் அதை முற்றாக மறுத்து வருகின்றனர், வடகொரியாவில் இருந்து வெளியேறியவர்களும், அரசியல் நோக்கர்களும்.

வடகொரியாவுடன் பிரித்தானியா சுமூக உறவையே இதுவரை பேணி வருகிறது. மூடப்பட்டுள்ள தூதரகத்தை மிக விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரித்தானிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வடகொரியாவில் இருந்து பிரித்தானிய தூதர்கள் தற்போது சாலை வழியாக சீனாவுக்கு சென்றுள்ளதாகவும் தென் கொரிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய தூதரகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த தேசிய கொடி தற்போது அங்கே இல்லை எனவும், அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் வாகனங்களில் வெளியேறியுள்ளதாகவும் ரஷ்ய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் சீன எல்லையில் அமைந்துள்ள Dandong நகரில் இவர்கள் அனைவரும் இரண்டு வார காலம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அதன் பின்னர் லண்டன் திரும்புவார்கள் எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகள் வடகொரியாவில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.