April 19, 2024

சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்தில் பயணித்து கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்!

அத்தியாவசிய சேவைகள் காரணமாக சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்து ஊடாக கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாளை முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்றாலும், சுகாதார அமைச்சின் அனுமதியின் அடிப்படையில் மட்டுமே பேருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளைத் தொடங்குவது தொடர்பான சுகாதாரத் துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது. சந்திப்பின் நிறைவில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்படாததால் பல சிக்கல்கள் எழக்கூடும். அதனால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்தில் பயணித்து கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்ற பகுதிகளிலிருந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு பயணிக்க பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும், தற்போது அந்த இரண்டு மாவட்டங்களுக்குள் பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.

அத்தோடு 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையில் சேவைகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனவே இது தொடர்பாக ஒரு பிரச்சினை எழாது. இலங்கை போக்குவரத்து சபையால் மாத்திரம் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் எளிதாக்க முடியாது.

சுமார் 5 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே சேவையில் உள்ளன. எனவே அனைத்து பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த அறிவுறுத்தியுள்ளேன். பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் அனைத்து விடுப்புகளையும் ரத்து செய்யுமாறும் பணித்துள்ளேன்.

பொதுப் போக்குவரத்தில் தற்போது பல குறைபாடுகள் இருக்கக்கூடும். வெற்றிகரமான பொதுப் போக்குவரத்து சேவைக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஆதரவு கட்டாயமாகும் என்றார்.