März 29, 2024

„ஏ.ஆர்.ரஹ்மான் ஆண்டுதோறும் ரம்ஜானுக்கு புதிய உடைகளைப் பரிசளிப்பார்!“- இசையமைப்பாளர் ரைஹானா

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

ரம்ஜான் மனிதநேயத்தின் மகத்தான விழா. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் எல்லோரும் பெறுவதற்கான நாளாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. ரம்ஜான் நோன்பு இருப்பதன் காரணமே சக மனிதர்களின் துன்பத்தை உணர வேண்டும் என்பதுதான்.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பெருநாள், பக்ரீத் தியாகத் திருநாள் ஆகிய இரண்டு பண்டிகைகளைக் கொண்டாடுவதைத் தங்களின் கடமையாகக் கொள்வார்கள். ரம்ஜான் மாதம் தொடங்கிய நாள் முதல் அவர்கள் நோன்பைக் கடைப்பிடிப்பார்கள். நோன்பின் நிறைவுநாளை ரம்ஜான் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். ரமலான் நோன்பின் சிறப்புகள் பற்றி இசையமைப்பாளரும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியுமான ரைஹானாவிடம் கேட்டோம்.

ரம்ஜான் பண்டிகை

ரம்ஜான் பண்டிகை

“தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரம்ஜான் மாதத்தில் பின்பற்றப்பட வேண்டிய முக்கியக் கொள்கை. இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று, ரம்ஜான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதம். ரம்ஜான் மாதம் என்பது, அல்லாவை அதிகம் நெருங்கும் மாதம்.

ரம்ஜான் மனிதநேயத்தின் மகத்தான விழா. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் எல்லோரும் பெறுவதற்கான நாளாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. ரம்ஜான் நோன்பு இருப்பதன் காரணமே சக மனிதர்களின் துன்பத்தை உணர வேண்டும் என்பதுதான்.

2000-ம் ஆண்டு தொடங்கி கடந்த 20 ஆண்டுகளாக நான் ரம்ஜான் நோன்பு இருக்கிறேன். தொடக்கத்தில் நான் இரவு 11 மணிக்குச் சாப்பிடுவதுடன் சரி, மறுநாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து மாலை ஆறரை மணிக்குத்தான் சாப்பிடுவேன். ஆனால், அப்படி இருக்கக் கூடாது என்று கூறியதால், கடந்த ஆறேழு ஆண்டுகளாகக் காலை 3.30 மணி அல்லது 4 மணிக்கு எங்களுக்கான சஹர் உணவைச் சாப்பிட்டு முடித்துவிடுவேன். அதன் பிறகு மிகவும் கடுமையாக நோன்பைக் கடைப்பிடிப்பது வழக்கம். மாலை 6.30 மணிக்கு நோன்பை நிறைவு செய்வோம்.

இசையமைப்பாளர் ரைஹானா

இசையமைப்பாளர் ரைஹானா

இந்த 20 ஆண்டுகளில் ஒரே ஒரு வருடம் மட்டும் என்னால் நோன்பு இருக்க முடியவில்லை. அந்த ஆண்டு எனக்கு வயிற்றில் அசிடிட்டி பிராப்ளம் ஏற்பட்டதுதான் காரணம். அதன்பிறகு தொடர்ந்து நான் நோன்பு நோற்று வருகிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் 1990-லிருந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நோன்பைக் கடைப்பிடிக்கிறார்.

ரம்ஜான் நோன்பின் பயன்கள் பல!

வருடம் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். இந்த ரம்ஜான் மாதத்தில் நாம் சாப்பிடாமல் நோன்பு இருக்கும்போது மற்றவர்களின் பசியை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். மற்றவர்களின் பசியை அறிந்துகொள்பவர் இரக்கம் உள்ள மனிதராக மாறிப்போய்விடுவார். இதுதான் ரம்ஜான் நோன்பின் தாத்பர்யம். உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் வளமையும் வலிமையும் சேர்க்கக்கூடியது.

உடல் ஆரோக்கியத்துக்கு நோன்பு மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பசியின்போது நாம் எவ்வளவு கோபமாக இருக்கிறோம் என்பதை நம்மால் உணர முடியும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஆகச் சிறந்த பயிற்சியாக நோன்பு நாள்கள் இருக்கின்றன.

Ramzan Prayer

Ramzan Prayer

ரம்ஜான் நாளில் பிரியாணி, பாயசம், வடை போன்ற பலகார வகைகளை நாங்கள் தயார்செய்து எல்லோருக்கும் பகிர்ந்தளித்து நாங்களும் சாப்பிடுவோம். அதன் பிறகு என் அம்மாவின் வீட்டுக்கு நான் புறப்பட்டுச் செல்வேன். என் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்திப்பேன். அவர் ஆண்டுதோறும் புனித ரம்ஜான் நாளில் எங்களுக்குப் புத்தாடைகளைத் தருவார். அவற்றை அணிந்துகொண்டு எங்கள் அம்மா மற்றும் சகோதரர், சகோதரிகள், அவர்களின் குழந்தைகளுடன் நாங்கள் ரம்ஜானைக் கொண்டாடுவோம்.“