März 29, 2024

பிணை கோரி ராஜித மீண்டும் நீதிமன்றில்?

வெள்ளை வேன் விவகாரம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தன்னை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன கடந்த 2019 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி அனுமதித்த உத்தரவானது, தவறானதென அறிவித்து, பிணையில் இருந்த தன்னை மீள விளக்கமறியலில் வைக்க தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவின் உத்தரவு சட்ட விரோதமானது எனவும், அந்த தீர்மானத்தை திருத்தி உத்தரவு பிறப்பிக்குமாரும் கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தின தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மீளாய்வு மனு எதிர்வரும் வெள்ளியன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இன்றையதினம் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த பெர்ணான்டோ, அச்சல ஆகியோர் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மீளாய்வு மனு பரிசீலனைக்கு வந்தபோது, குறித்த மனு தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்த எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளியன்று மன்றில் ஆஜராக சட்ட மா அதிபருக்கு அறிவித்தல் அனுப்பியது.
சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் அனுசரணையில் இந்த மீளாய்வு மேன் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.