April 19, 2024

பதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது?

பதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது? நாங்கள் எங்கே தவறிழைக்கிறோம்?
நடந்தது இனப்படுகொலை தான் என்பதனை எங்களின் கட்சித்தலைவர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. உலக சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஐ.நா ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற கேள்விக்கு, எங்களின் புவிசார் அரசியலும் பூகோள அரசியலும் தான் காரணம். எங்களின் புவிசார் அரசியல் அவ்வாறான கோரிக்கைக்கு பாதகமாக காணப்படுகின்றது.
இனப்படுகொலைக்கான நீதி என்பது தனியே தூய நீதி அல்ல. அது அரசுகளின் நீதி. அரசுகளின் நீதி என்பது அரசுகளின் அரங்கத்தில் அரசியல் செய்ய வேண்டும். நாங்கள் வெறும் அறநெறி சார்ந்த தூய நீதியாக நாங்கள் பார்க்க முடியாது. உலகத்தில் இனப்படுகொலைக்குள்ளான பலருக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. எனவே இது முழுக்க முழுக்க அரசியல். இங்கே அரசியல் செய்யப்பட வேண்டும். அந்த அரசியலை ஜெனீவாவிலும் செய்ய தவறி விட்டோம். உலகம் முழுக்க செய்ய தவறிவிட்டோம். ஏனென்றால் அப்படி செய்ய முடியாத அளவுக்கு நாங்கள் சிதறிப் போயிருக்கின்றோம். உண்மையில் இதனை தாயகத்தில் இருந்து தான் திட்டமிட வேண்டும்.
தாயகத்தில் 2009 க்கு முன்னுக்கு ஒரு பயச் சூழல் இருந்தது. 2015 க்குப் பிறகு அப்படிப்பட்ட கட்டமைப்புக்களை உருவாக்கி இருக்கலாம். அவற்றை வளர்த்து ஐக்கியப்படுத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் பின்னுக்குப் போய் இருக்க மாட்டோம். நாங்கள் இப்போது திரும்பவும் 2009 இல் நிற்கிறோம். எங்களை ஒற்றுமைப்படுத்த்துவதற்கு கவர்ச்சியான ஜனவசியம் மிக்க பலமான தலைமைகள் எங்கள் மத்தியில் இல்லை.
இன்றைக்கு ஒரு பலமான தேசியத் தலைமை இல்லாதபடியால் தான் இன்று சிறு சிறு குழுக்கள், சிறு சிறு அமைப்புகள் தங்கள் பாட்டில் நினைவு கூர்தலை செய்கின்றன. பலமான தேசிய தலைமை இல்லை. பலமான தேசிய இயக்கம் இல்லை. எங்களிடம் இருப்பதெல்லாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே.
நாங்கள் கேட்டது பரிகார நீதியை ஆனால் உலகம் பரிந்துரைத்தது நிலைமாறுகால நீதியைத் தானே?
நாங்கள் கேட்டது பரிகார நீதியை என்பது உலக சமூகத்துக்கு தெரியும். நிலைமாறுகால நீதி தான் இப்போது இருக்கின்ற அரசியல் யதார்த்தம். நிலைமாறுகால நீதியை எப்படி பரிகாரநீதியாக மாற்றலாம் என்பது தான் எங்களின் கெட்டித்தனம். உலகம் இப்போது உங்களுக்கு பரிகார நீதியை தராது. ஏனென்றால் புவிசார் அரசியலும் பூகோள அரசியலும் அந்த அளவில் தான் நிற்கிறது. பரிகார நீதி தான் வேண்டும் என்று கேட்கும் தரப்புக்கள் ஐக்கியப்பட்டு மக்கள் ஆணையை பெற வேண்டும்.
உலகசமூகமோ அல்லது நாடுகளின் பிரதிநிதிகளோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் தான் கதைப்பார்கள். நீங்கள் எவ்வளவு இலட்சியப்பூர்வமான ஆளாக இருந்தாலும் பிரபல்யமான ஆளாக இருந்தாலும் உங்களுக்கு மக்கள் ஆணை இல்லை என்றால் உங்களோடு அவர்கள் கதைக்க மாட்டார்கள்.
அவ்வாறாயின் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிகார நீதியை ஏன் கோரவில்லை?
இல்லை, தாங்கள் நிலைமாறுகால நீதியை ஏற்றுக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாகவே சொல்லி விட்டது. கூட்டமைப்பின் அரசியல் கடந்த பத்தாண்டுகளாக அப்படித்தான் இருக்கிறது. அது ஒரு மித மிதப் போக்குடைய அரசியலைத் தான் முன்னெடுக்கிறது. சிங்கள மக்களை பகை நிலைக்கு தள்ளக் கூடாது. சிங்கள மக்களை கோபப்படுத்தக் கூடாது. சிங்கள மக்களுக்கு நோகாமல் ஒரு தீர்வைப் பெற முடியுமா என அவர்கள் யோசிக்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் அவர்கள் ஏக்க ராச்சிய என்று சொல்லிக் கொண்டு அங்கே நின்றார்கள். அதன் ஒரு அங்கமாக தான் படைத்துறை மேலாண்மை பெற்ற மஹிந்த அரசை சந்தித்து பேசினார் சம்பந்தன்.
டிலான் பெரேரா அரசியல் யாப்புக்கான இடைக்கால வரைபின் போது நடந்த விவாதத்தில் நாடாளுமன்றில் சொல்கிறார், சம்பந்தரைப் போல விட்டுக் கொடுக்கிற ஒரு தலைவர் இனி வரார். அது உண்மை. அப்படி விட்டுக் கொடுப்பதன் மூலம் சிங்கள மக்களின் நன்மதிப்பை பெற்று ஒரு தீர்வைப் பெறலாம் என்று அவர் யோசிப்பதாக தெரிகிறது.
நிலைமாறுகால நீதி போதாது என்று நினைக்கும் தரப்புக்கள் முதலில் ஐக்கியப்பட்டு பின் மக்களாணையை பெற வேண்டும்.