April 19, 2024

`சிறப்பு ரயிலைப் பார்வையிட இவர் அதிகாரியா…?’ -டெல்லி முரளியால் வேலூரில் வெடித்த சர்ச்சை

சிறப்பு ரயிலைப் பார்வையிட வந்த டெல்லியார்

சிறப்பு ரயிலைப் பார்வையிட வந்த டெல்லியார்

அரசியல் ஆளுமைகளுடன் நெருக்கமாக உள்ள டெல்லி முரளிக்குச் சிறப்பு ரயிலைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகிறது.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெறவந்து ஊரடங்கால் தவிப்புக்குள்ளான ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர் சிறப்பு ரயில்கள் மூலம் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகிறார்கள். காட்பாடியிலிருந்து நேற்றிரவு மேற்கு வங்கத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் அம்மாநிலத்தைச் சேர்ந்த 1,476 பேர் பயணம் செய்தனர். இவர்களை, வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம், எஸ்.பி பிரவேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். ரயில் புறப்படும் முன் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் திடீரென ‘அலர்ட்’ ஆனார்கள்.

டெல்லியாருக்கு அருகில் கலெக்டர், எஸ்.பி

டெல்லியாருக்கு அருகில் கலெக்டர், எஸ்.பி

‘‘எஸ்.பி-யை விட உயரதிகாரி யாரோ ஒருவர் சிறப்பு ரயிலைப் பார்வையிட வருகிறார்’’ என்று எல்லோருமே நினைத்தார்கள். ஆனால், சம்பந்தமே இல்லாமல் ‘டெல்லியார்’ எனப்படும் முரளிதரன் அங்கு வந்தார். எஸ்.பி பிரவேஷ்குமார் அவரை ரயில் நிலையத்துக்குள் அழைத்துச் சென்று நடைமுறைகளை எடுத்துக்கூறினார். சிறப்பு ரயிலைப் பார்வையிட்ட பிறகு அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். ரயில் நிலையத்துக்குள் செல்ல பத்திரிகையாளர்களுக்கே அனுமதி வழங்கப்படவில்லை. அப்படியிருக்க, டெல்லி முரளி மட்டும் அதிகார தோரணையுடன் வந்துசென்றது எப்படியென்று பலரும் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதே சமயம், ரயில் நிலையத்திலிருந்த பலருக்கு ‘டெல்லியார்’ என்றால் யாரென்றே தெரியவில்லை. இவரைப் பற்றி 29.12.2019 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘வருகிறார் டெல்லியார்… தமிழகத்தில் புதிய தர்பார்!’ என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையின் எதிரொலியாக, ‘‘டெல்லியார் என்பவர் மத்திய அரசுடன் இருக்கும் தன் செல்வாக்கு மூலம் பவர் பாலிக்டிக்ஸில் வலுவான மீடியேட்டராகப் பலவற்றைச் சாதித்துவருகிறார். தமிழகத்திலும் பல்வேறு விவகாரங்கள் இவர் மூலம் நடக்கின்றன’’ என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

‘டெல்லியார்’ எனப்படும் முரளிதரன்

‘டெல்லியார்’ எனப்படும் முரளிதரன்

அதையடுத்து, டெல்லியாரை நேர்காணல் செய்து 01.01.2020 அன்று வெளியான ஜூ.வி-யில் ‘நான் லாபியிஸ்ட் அல்ல!’ என்ற தலைப்பில் மீண்டும் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். அந்தப் பேட்டியில், அரசியல் ஆளுமைகளுடன் நெருக்கமாக இருப்பதை டெல்லியார் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், சிறப்பு ரயிலைப் பார்வையிட டெல்லி முரளிக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் சிலரிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு, ‘‘எந்த மாநிலத்துக்குச் சிறப்பு ரயில் செல்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காகத்தான் டெல்லியார் வந்தார். மற்றபடி, வேறு எந்தத் தகவல்களும் எங்களுக்குத் தெரியாது’’ என்று மழுப்பலாகப் பதில் கூறினர்.

இது தொடர்பாக டெல்லி முரளி தரப்பில் விசாரித்தபோது, `காட்பாடி வழியாக வட இந்தியா செல்லும் ரயில் குறித்த விவரங்களை அறிவதற்காக அவர் அங்கு சென்றார். வேறு எந்த பின்னணியும் அதற்குப்பின் இல்லை!‘ என்றனர்.